“வடக்கு – கிழக்கு டயஸ்போராக்களின் ஆசைக்காக சாணக்கியன் வேலை செய்துகொண்டிருக்கிறார்.” – அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு !

வடக்கு கிழக்கின் இணைப்பு என்பது வெளிநாட்டு சக்தியான டயஸ்போராக்களின் விருப்பமாகும்.வடக்கினையும் கிழக்கினையும் இணைத்து முதலமைச்சராக வருவதே ஆகும். இந்த விருப்பத்திற்கு சாணக்கியன் ஒரு உந்துகோலாக இருந்து கொண்டு இருக்கின்றார் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
இன்று(11) அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது ,

சாணக்கியன் எம்.பிக்கு வரலாறு தெரியாது என தமிழ் பேசும் மக்கள் கூறியிருந்தால் அதில் உண்மை இருக்கும்.எனெனில் இன்று அவருக்கு பேச்சு திறமை இருக்கலாம் .அதற்காக எல்லாவற்றையும் பேசி தன்னை ஒரு திறமைசாலியாக காட்ட முயற்சிக்கின்றார்.ஆனால் அவருக்கு வரலாறுகள் தெரியாது.ஆனால் அவரது வரலாறு நம் எல்லோருக்கும் தெரியும்.கடந்த காலங்களில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக இருந்தவர்.வடக்கு தொடர்பாக வரலாறு இன்னும் அவருக்கு தெரியாது.

ஏனெனில் அவருக்கு வயது போதாது.தற்போது 30 வயதினை தான் தாண்டியிருப்பார் என்று நினைக்கின்றேன்.வடக்கில் மக்களுக்கு நடந்த துன்பங்கள் கிழக்கிலே மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எதுவும் அவருக்கு தெரியும் என்பதை நாம் நம்பவில்லை.அதனால் அவருக்கு அந்த அனுபவம் காணாது என்பதே எமதும் மக்களினதும் கருத்தாகும்.அவர் இப்பொழுது வெளிநாட்டு சக்திகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.இவரது செயற்பாடு ஆடு நனைகின்றது ஓநாய் அழுதது என்ற செயலில் தான் உள்ளது.இன்று முஸ்லீம் மக்களுக்கு பிரச்சினை உள்ளது என்று கூறி திரிகின்ற இந்த வார்த்தைகள் இந்த பழமொழிக்கு ஒப்பானது என்பதை மக்கள் எல்லோரும் அறிவார்கள்.

இவரது தற்போதைய தேவையானது வடக்கினையும் கிழக்கினையும் இணைத்து முதலமைச்சராக வருவதே ஆகும்.இந்த வடக்கு கிழக்கின் இணைப்பு என்பது வெளிநாட்டு சக்தியான டயஸ்போராக்களின் விருப்பமாகும்.இந்த விருப்பத்திற்கு சாணக்கியன் ஒரு உந்துகோலாக இருந்து கொண்டு இருக்கின்றார்.நாங்கள் அதை அனுமதிக்க முடியாது.நீங்கள் சிங்கள மக்களுடன் வாழ முடியாது என்பதனால் தான் தனிநாடு கேட்டு போராடினீர்கள்.அதுமாத்திரமன்றி வடக்கில் நிம்மதியாக முஸ்லீம் மக்களை வாழ அனுமதித்தீர்களா?அங்குள்ள அவர்களின் காணி பிரச்சினைகளை தீர்த்து கொடுத்துள்ளீர்களா? அம்மக்களை அங்கு இதுவரை ஒழுங்காக குடியேற்றப்படாமல் தடுத்துள்ளீர்களே இதற்கு என்ன கூறுவது என்று கேட்கின்றேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *