விதி, வீதிகளில் விளையாடுகின்றது! – ஒரு மாணவியும் அவளின் கனவுகளும் வாகனத்தின் சக்கரத்தில் நசுங்கி ஒரு மாதம்!!!

இன்றைக்கு டிசம்பர் 15 காலை வீதிப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஏ9 வீதியில் லிற்றில் எய்ட் அமைப்பினால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டது. லிற்றில் எய்டில் கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட வெளி மாணவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வீதிப் போக்குவரத்தில் பாதுகாப்பை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டது. மாணவர்கள் வீதிப் பாதுகாப்பை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கி அமைதியான முறையில் இந்நிகழ்வை நிகழ்த்தினர்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாக நவம்பர் 15 காலை 8:15 மணிக்கு கல்லூரிக் கனவுகளோடு மஞ்சள் கடவையில் பாடசாலையை நோக்கி கடந்த மாணவி மதுசாளினி திருவாசகம் (17) பாதசாரிகள் கடக்கின்ற கடவையிலேயே வாகன விபத்தில் கொல்லப்பட்டாள். அப்பதின்ம வயது மாணவியின் நினைவாக விபத்து நடந்த அந்த இடத்தில் லிற்றில் எய்ட் மாணவர்கள் இந்த விழிப்புணவு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சியில் ஊற்றுப்புலம் கிராமப் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கற்று சிறந்த பேறுபேறுகளைப் பெற்ற மூன்று மாணவிகள் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு உயர்தரம் கற்க அனுமதிபெற வந்த போதே இந்த மோசமான விபத்து நிகழ்ந்தது. தனது மகளை விறகுவெட்டி விற்ற பணத்தில் படிக்க வைத்த தந்தையின் தலையில் பேரிடி.

இலங்கையின் வீதிகள் மரண வீதிகளாகிக் கொண்டிருக்கின்றது என உலக சுகாதார நிறுவன புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வீதிகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 10 மரணங்கள் வரை சம்பவிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. 2020ம் ஆண்டில் இல்கையின் வீதிகளில் 3590 பேர் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர். தெற்காசியாவிலேயே இலங்கையின் வீதிகளே ஆபத்தானவையாக உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கின்றது. இலங்கையில் ஒரு லட்சம் பேருக்கு 17 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய வயதுடையோராகவும் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பாரிய பொருளாதார நெருக்கடியையும் சந்திக்கின்றனர்.

காண்டீபன் ஜெகநாதன் (44) விபத்தினால் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஓகஸ்ட் 8இல் மரணமடைந்தார். இளம் குடும்பத்தவரான ஒரு குழந்தையின் தந்தையான காண்டிபன் வாகரை டிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர். ஓகஸ்ட் 2 இல் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மாங்கேணி பகுதியில் விபத்துக்கு உள்ளானார்.

காண்டீபனின் மறைவு அக்குடும்பத்தின் எதிர்காலத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் ஜயமில்லை. வீபத்துக்களினால் உயிரிழந்த வறுமைப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி கண்டுள்ளதுடன் அவர்களில் மூன்றில் இரு பங்கினர் கடன்வாங்கி வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

2019யைக் காட்டிலும் 2020இல் இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2019இல் 2840 ஆக இருந்து விபத்து மரணங்கள் 2020இல் 3590 ஆகா 26வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் பாதிக்கப்படுபவர்களில் 70 வீதமானவர்கள் பொருளாதார ரீதியாக சிக்கனமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்களாகவே உள்ளனர். விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் 50 வீதமானவர்கள் இருசக்கர அல்லது முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள். வீதி விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் பாதசாரிகள் மூன்றில் ஒரு பங்கினர் பாதசாரிகள். மேலும் 25,000 பேர்வரை விபத்துக்களில் காயமுறுகின்றனர். இலங்கையில் யுத்தத்திற்குப் பின் உடல் ஊனத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக வீதி விபத்துக்கள் உள்ளன.

லண்டன் சரேயில் வசிக்கின்ற முருகையா சங்கரப்பிள்ளை 2014 இல் தாயகத்திற்குச் சென்றிருந்த போது வீதியோரமாக நடந்த சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்தர் மோதியதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டுமூன்று இடத்தில் என்பு முறிவு ஏற்ப்பட்டது. அவர் யாழ் நொதேர்ன் மருத்துவமனையில் பத்து நாட்கள் இருந்து பலத்த கஸடங்களுக்கு மத்தியில் பிரித்தானியா திரும்பினார். டீப் வெயின் துரொம்போசிஸ் என்ற இதய – குருதி அழுத்த நோயுடன் இரத்தம் கசிய கசியவே லண்டன் திரும்பி உடன் லண்டன் கிஹ்ஸ்ரன் மருத்துவமனையிலும் பின் கிஹ் ஜோர்ஜ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் சிகிச்சையளிக்கப்பட்டு அடுத்த 12 மாதங்கள் வீட்டில் வைத்து மருத்துவ தாதி ஒருவர் சென்று பார்த்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் முற்றாக குணமடைய மூன்று ஆண்டுகள் எடுத்தது. இச்சம்பவம் ஊரில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டு இருந்தால் அவர் மூன்று மாதங்களுக்குள் உயிரிழந்து இருப்பார் என்றார் முருகையா. அதிஸ்ரவசமாக உயிர் தப்பி இருந்தால் உடல் ஊனமடைந்திருக்க வேண்டி வந்திருப்பதுடன் பொருளாதார ரீதியிலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்.

தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு (கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்து இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.)இ பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள்இ வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தைஇ வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமைஇ பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிடும் இவ்விபத்துக்கள் பல்லாயிரம் குடும்பங்களை உருக்குலைய வைக்கின்றது. அவர்களுடைய கனவுகளை வண்டிச் சக்கரத்தில் நசித்துவிடுகின்றது. வேகம் ஒரு போதும் விவேகமானதல்ல. உயிரினும் மேலானது எதுவுமில்லை. இன்னொரு உயிரைப் பறிக்கின்ற, எம்முயிரை பறிக்கின்ற வேகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். வேகமாகச் சென்று நாம் எதனையும் சாதித்துவிடுவதில்லை. ஆகையால் விவேகத்துடன் நிதானத்துடன் வாகனத்தை ஓட்டுவோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *