“மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் அமைதிகாக்க முடியாது.” – ஜீவன் தொண்டமான்

“மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் மக்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தீர்வுக்காக போராடுவோம்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்ட நிறுவனங்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கரபத்தனை நிர்வாகங்களுக்குட்பட்ட தோட்ட நிறுவனங்களுக்கு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன என சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அக்கரபத்தனை நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட முகாமைத்துவ தரத்திலான அதிகாரிகளுக்கும், இ.தொ.கா. உள்ளிட்ட தொழிற்சங்க பிரமுகர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் பிராந்திய தொழில் ஆணையாளர் தலைமையில் இன்று ஹட்டனிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான்,

அக்கரபத்தனை நிர்வாகங்களுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை பெருந்தோட்ட மக்களை மிகவும் மோசமான நிலைக்கு அக்கரபத்தனை நிர்வாகம் தள்ளிக்கொண்டிருக்கின்றது. சில தோட்டங்களில் 10 முதல் 12 கிலோ கொழுந்து பறிப்பதே கடினமாக செயல். இந்நிலையில் 20 கிலோ பறிக்குமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதனை நாம் ஏற்கவில்லை.

துரைமாரை இறக்கி கொழுந்து பறிக்க சொன்னோம், அவர்கள் எவ்வளவு பறிக்கின்றார்களோ அவர்களைவிட அதிகமாக 2 கிலோ பறித்து தருவதாக குறிப்பிட்டோம். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. கொடுப்பனவுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. எனவே, எமது போராட்டம் தொடரும். கடந்த ஒரு வருடமாக நாம் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவில்லை.

மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் மக்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தீர்வுக்காக போராடுவோம். அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கின. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலில்  நாளொன்றுக்கான பெயருக்கு 20 கிலோ பறித்தாக வேண்டும் என்பது உட்பட தோட்ட நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.

அதேபோல் தொழிற்சங்கங்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் உறுதியான இணக்கப்பாடின்றி பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *