யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் தரம் 7இல் பயிலும் மாணவனை கடந்த 9ஆம் திகதி வகுப்பாசிரியர் தாக்கியதில் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவனின் காது மற்றும் உடல் ரீதியான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவன் மீதான தாக்குதல் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரின் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேவேளை, வடமராட்சி புற்றளை மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் பயிலும் மாணவனை சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 200 தடவைகள் தோப்புக்கரணம் செய்யுமாறு நேற்று தண்டனையளித்துள்ளார்.
அதனால் உள உடல் ரீதியாக மாணவன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பெற்றோர் பாடசாலைக்குச் சென்ற போது மாணவனை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு உள்படுத்துமாறு பாடசாலை அதிபர் கேட்டுள்ளார். அவருக்கான சிகிச்சைக்கு எவ்வளவு செலவானாலும் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிகளவு தடவை தோப்புக்கரணம் செய்யவைப்பது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு உயிரைப் பறிக்கும் வகையிலான சித்திரவதை என மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் அண்மையில் மாணவன் ஒருவரைத் தாக்கிய சம்பவம் பொலிஸாரின் தலையீட்டினால் இணக்கத்துடன் முடித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.