அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது. ஆனால், அதற்காகத் தவறான தீர்மானங்களுக்குத் துணைபோகவும் முடியாது.” என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்கும் என முழுமையாக எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது தலைமையிலான அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகச் செயற்படுகின்றமை கவலைக்குரியது. கொள்கைக்கு எதிரான தீர்மானங்கள், அரசு தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியையும், அரசின் கொள்கையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குண்டு.
யுகதனவி மின்நிலையம் இயற்கை எரிவாயு விநியோகத்தின் ஊடாக செயற்பட வேண்டும் என்பது அவசியமானதாகும். இயற்கை எரிவாயு விநியோக நிறுவனத்துக்கும், மின்சாரத்துறை அமைச்சுக்கும் இடையில் சாதாரண ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அதனை விடுத்து எரிவாயு விநியோகத்தின் உரிமையைப் பிற நாட்டின் தனியார் நிறுவனத்துக்கு ஏகபோகமாக விட்டுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அமெரிக்க நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏகபோக உரிமையைத் தனதாக்குவதன் ஊடாக எதிர்காலத்தில் தோற்றம் பெறும் சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதன் காரணமாகவே அமைச்சரவையின் மூன்று பிரதான உறுப்பினர்கள் அதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றோம்.
யுகதனவி விவகாரத்துக்கு சமூகத்தின் மத்தியில் பல எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன. கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தத்துக்கு எதிராக பல தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்கள்.” என அவர் கூறியுள்ளார்.