“பின்னடைவுகள் பயணத்தின் ஒரு பகுதி. அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலான தீர்மானங்களை எடுக்கக் கூடியவராக தலைவர் இருக்க வேண்டும்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில் இன்று(19) முற்பகல் இடம்பெற்ற 96ஆவது விடுகை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,
தன்னம்பிக்கை மற்றும் குழுவில் உள்ள ஏனையவர்களின் மீதான நம்பிக்கையே ஒரு தலைவரது வெற்றிக்கான பிரதான காரணியாக அமைகின்றது.இராணுவ அதிகாரி ஒருவரது வாழ்வில் ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாக கருதப்படுகிறது. ‘எளிமையான பணிகளில் கூட அதிக கவனத்தைச் செலுத்துதல் மற்றும் கூட்டாகச் செயற்படும் திறனை வளர்த்துக்கொள்ளல் என்பன இராணுவத்தினருக்கான பண்புகளாகும்.
ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், மற்றவர்களின் ஒத்துழைப்பின்றி வெற்றிபெற முடியாது. எவ்வாறான இடையூறுகள், தடைகள் ஏற்பட்டாலும் மக்களுக்கான பணியில் கவனம் செலுத்த வேண்டும்.
பின்னடைவுகள் பயணத்தின் ஒரு பகுதி எனவும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலான தீர்மானங்களை எடுக்கக் கூடியவராக தலைவர் இருக்க வேண்டும் எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.