வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை வேந்தராக நியமித்தமைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பட்டமளிப்பு விழாவில் பட்டப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளாமல் அவரை கடந்து சென்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் மதத்தையும், அரசியலையும் – கல்வியோடு கலக்காதீர்கள் என்ற கோஷங்கள் அதிகம் பகிரப்படுபட்டுவருகின்றன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக முகாமைத்துவ மற்றும் நிதி ஆசிரியர் சங்கம் (FMFTA) முன்னதாக அறிக்கையொன்றில் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே மாணவர்கள் சிலர், அவரிடம் பட்டப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளவில்லை.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக முழு வைபவத்தில் பங்கேற்கப் போவதில்லை என FMFTA தெரிவித்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இன்றும் (19) நடைபெறுகிறது. இந்த விழா, கடந்த மூன்று நாள்களாக நடைபெறுகின்றனமை குறிப்பிடத்தக்கது.