முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சட்ட விரோத கருக்கலைப்புக்கு முயற்சித்த போது கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி முல்லைத்தீவு மூங்கிலாறு கிராம மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூங்கிலாறு கிராமத்தில் இன்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் 18-12-2021 அன்று பாழடைந்த வளவின் பற்றைக்காணிக்குள் சடலமாக மீட்கப்பட்ட 13 வயதுச் சிறுமி, அவரது அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக/ அல்லது கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு இரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ வல்லுநர் அறிக்கையிட்டுள்ளார். அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
யோகராசா நிதர்ஷனா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (18)இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். திருகோணமலைக்கு இவரது குடும்ப அங்கத்தவர்கள் சென்றிருந்த நிலையில் தாயாருடன் தனிமையில் வீட்டில் இருந்த சிறுமி அருகில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று ஒளிரவிடப்பட்டிருந்த மின்குமிழ்களை நிறுத்த சென்ற சமயத்தில் கடந்த 15 ஆம் திகதி காலை முதல் காணாமல் போயுள்ளதாக இவரது தாயாரால் கடந்த 15 ஆம் திகதி மாலை 2 மணிக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
திருகோணமலையில் உள்ள மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற சிறுமி , கடந்த ஜூலை மாதம் வீடு திரும்பியிருந்தார். அதன்பின்னர் அவர் வீட்டிலேயே குடும்பத்தினருடன் வசித்து வந்திருந்தார். காணாமல் போயிருந்த சிறுமி தனது வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் உள்ள பாழடைந்த வளவின் பற்றைக் காணி ஒன்றில் நேற்று முன்தினம் 18ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
முல்லைத்தீவு மாவட் நீதிமன்ற பதில் நீதவான் ரி .பரஞ்சோதி முன்னிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவின் விசாரணையோடு சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் சடலம் மீதான பரிசோதனைகள் இடம்பெற்றது. குறித்த பரிசோதனையில் சிறுமியின் பெண் உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என்று சட்ட மருத்துவ வல்லுநர் சட்ட மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அத்தோடு சடலம் மீதான பரிசோதனையில் சிறுமி 2 மாத கருவுற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டாரா? கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டாரா? சித்திரவதைக்கு உள்படுத்தப்பட்டாரா? போன்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.