தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் மத்திய மற்றும் தென் கிழக்கு மாகாணங்களை ‘ராய்’ புயல் புரட்டிப் போட்டது.
கடந்த 2 நாட்களாக 121 கி.மீட்டர் முதல் 168 கி.மீட்டர் வேக அளவுக்கு வீசிய சூறாவளி காற்றுக்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது.
சூறாவளிக் காற்றுடன் பயங்கர மழை பெய்ததால் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வாகன போக்குவரத்து அனைத்தும் ஸ்தம்பித்தன. 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டதால் இருளில் மூழ்கி உள்ளன. விவசாய பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன.
இந்த புயலுக்கு 8 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ராய் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
50-க்கும் மேற்பட்டோர் மாயமாகிவிட்டனர். அவர்களின் கதி என்ன வென்று தெரியவில்லை. அங்கு மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.