யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் உட்பட இருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாகவும் இன்று (21) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஒரு மேலதிக வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரவு செலவுத் திட்டத்தில் நடுநிலை வகிப்பதாக கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடி சமூகநலன் சார்ந்து முடிவு எடுக்கப்பட்ட போதும் குறித்த உறுப்பினர் எதிர்த்து வாக்களித்துள்ளதாக க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் கட்சியின் முடிவை மீறி செயற்பட்ட காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகிய இருவரும் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக க.சுகாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நடுநிலை வகித்திருந்தால் வரவு செலவுத் திட்டம் தவிசாளரின் மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.