2021 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றிவாகை சூடியுள்ளது.
இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணித் தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது..
ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ 63 ஓட்டங்களையும், டொம் கொஹ்லர்-காட்மோர் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
கோல் கிளாடியேட்டர்ஸ் சார்பில் மொஹமட் அமீர், நுவன் துஷார மற்றும் சமித் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அதன்படி, 202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கிளாடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் குணதிலக 54 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 39 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் சத்துரங்க மற்றும் ஹரசங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரை ஜப்னா கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.