“வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் ஞானசார தேரருக்கும் பங்கு இருக்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் மீது சட்டம் பாயாது என்றும் ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் இளைஞர்களைத் தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“அமைச்சர் அலி சப்ரியை பதவி விலகுமாறுக் கூறும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்ரியையும் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து?
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு. ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசு. அமைச்சர்கள் அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது.
இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும்கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். கிறிஸ்மஸ் பிறக்கிறது. அதற்கும் இவர் எதையாவது திருவாய் மலருவார். முஸ்லிம்களுக்கு எதிராக பலமுறை பலதையும் பேசியுள்ளார். இந்துக்களை அரவணைப்பது போல் பம்மாத்து காட்டுகிறார்.
ஆனால், வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் இவரும் இருக்கிறார். இதுபற்றி இவருக்கும் எனக்கும் ஒருமுறை வாக்குவாதமே நடந்தது. இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் தானே இவர்?
இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது.
இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது. ஆகவே, இவரது செயலணியின் பெயரை ‘ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்’ என நான் பிரேரிக்கிறேன்.
அதேபோல், இவரது இந்த வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லா விட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.