அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ மறைக்க எதுவும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்த போது ,
அரசாங்கத்தின் குறைப்பாடுகளை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை இருப்பதாகவும், இவ்வாறான நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கின்றது. என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே எனது ஒரே நோக்கமாக இருக்கின்றது. ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது.
நான் ஆட்சிக்கு வரும் போது எதிர்பாராத விதமாக கொவிட் பரவல் ஆரம்பமானதுடன், அதனால் நான் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாமல் போயுள்ளது. செல்வந்த நாடுகளில் இருந்த பொருளாதார பலம் காரணமாகவே அவை கொவிட் பரவலை முறையாக எதிர்கொண்டன. அத்துடன், எனக்கு யாருடனும் போட்டி இல்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது ஒரே குறிக்கோள். சிலரிடமிருந்து அதற்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை.
கூட்டாகச் செயற்படும் கலையை நான் நன்கு அறிந்தவன். ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் ஜனநாயகக் கட்டமைப்பிற்குத் தேவையான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.