ஆபாச கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து !

ஆபாசமான வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்து தயாரிக்கப்பட்ட சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு வயது பிள்ளைகளின் நலன்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பெண்கள் உள்ளிட்டோரின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இந்த சட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டதே தவிர கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்காக அல்ல.

இது தொடர்பில் சிவில் அமைப்புக்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பு தொடர்பான உப குழு மற்றும் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவோரது நிலைப்பாடுகள் கோரப்பட்டு, அவற்றை உள்ளடக்கிய திருத்தங்களுடன் குறித்த சட்ட மூலத்தை மீள சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அண்மையில் வெவ்வேறு தரப்பினரால் மாறுபட்ட நிலைப்பாடுகளும் , விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே மேற்கூறப்பட்டவாறு திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் வரை , ஏற்கனவே இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை விடுத்துள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *