பால்மாவின் விலை அதிகரிப்பால், தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
உணவகங்களில் டின் பாலை பயன்படுத்தி தேநீர் தயாரிக்க உத்தேசித்துள்ளதாக சங்கத்தின் தலைவரான அசேல சம்பத், தெரிவித்தார்.
பால்மாவின் விலையும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கோப்பை தேநீரின் விலையும் அதிகரிக்கப்பட்டால் பொது மக்களுக்கு மேலும் சுமை ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தட்டுப்பாடு, வரிசைகள் மற்றும் பொருட்களின் விலையை உயர்த்தும் கொள்கையை அரசாங்கம் தொடர்கிறது.
இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மா பக்கெட்டின் விலையை 150 ரூபாவாலும், 400 கிராம் பக்கெட்டின் விலையை 60 ரூபாவாலும் உயர்த்துவது விசேட கொள்கை அறிக்கையின் நோக்கமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கோப்பை தேநீரின் விலை ரூ.60ஆக அதிகரிக்கப்பட்டது. இதற்கு முன்னர் பால்மா விலை அதிகரித்ததால் நுகர்வோர் இதை தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தனர்.
பால்மா தட்டுப்பாட்டால் ஒரு கோப்பை தேநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நுகர்வோர் உணவகங்களுக்கு வந்ததாகவும், எனினும் உணவக உரிமையாளர்கள் பால்மாவை பெற முடியாமல் போனதால் தேநீர் தயாரிக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார். நுகர்வோருக்கு தரமற்ற தேநீரை வழங்க முடியாத நிலை உள்ளது.
நுகர்வோர் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.