முப்பது ஆண்டுகள் போரில் இருந்து நாட்டை விடுவித்ததாகக் கூறிய ராஜபக்சவினர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விட நாட்டுக்கு மிக மோசமான பேரழிவைத் தேடி தந்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே சம்பிக்க ரணவக்க இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஆழிப்பேரலை அனர்த்தத்தை விட மிக மோசமான அனர்த்தம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. அரசில் இருக்கும் பலரும், ராஜபக்சவினருக்கு வாக்களித்தவர்களும் இந்த அழிவைப் புரிந்துகொண்டுள்ளனர். நாட்டை மிக மோசமான நிதி நெருக்கடி நோக்கிக் கொண்டு சென்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர் என்பது உலகத்துக்குத் தெளிவாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவாகி பல மாதங்கள் முக்கிய அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிக்க முடியாமல் போனது. இதன் மூலம் நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்ல ஜனாதிபதி தயாரில்லை என்பது தெளிவானது” – என்றார்.