உயிருக்கு போராடிய நால்வரை காப்பாற்றிய மாணவனுக்கு நாலந்தாக் கல்லூரியில் அனுமதி

nalanda-college-logo.jpgமகியங்கனை வாவியில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த நால்வரின் உயிரைக் காப்பாற்றிய ஒன்பது வயது நிரம்பிய மாணவனுக்கு, கொழும்பு நாலந்தா உயர்நிலைக் கல்லூரியில் கற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. அடுத்தமாதம் முதல் வாரத்திலிருந்து, இம் மாணவன் கல்வி கற்பதற்கான ஒழுங்குகளை, கல்லூரி நிருவாகம் மேற்கொண்டிருக்கின்றது. மகியங்கனைப் பகுதியின் கெமுனுபுர மகா வித்தியாலயத்தின் ஆண்டு நான்கில் கல்வி கற்றுவரும் ஒன்பது வயது நிரம்பிய தினேஷ் சந்தகெலும் என்ற மாணவனுக்கே, மேற்படி வாய்ப்புக் கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் உழவு இயந்திரமொன்று வாவியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்த வேளையில் அவ்விபத்தில் சிக்கிய நால்வர் வாவியில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர்.

அவ்வேளையில் பாடசாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த தினேஷ் சந்தகெனும் என்ற மாணவன், உயிருக்காக போராடிக் கொண்டிருந்த நால்வரைக் கண்டு, வாவியில் துணிகரமாகக் குதித்து, வெகு சிரமத்தின் மத்தியில் நால்வரையும் கரைக்கு இழுத்துவந்து, அவர்களைக் காப்பாற்றினான்.

இச் செயலைக் கண்டு, பல்துறையினராலும் இம் மாணவன் பாராட்டுப் பெற்றுவந்தான். மாணவனின் உயர்படிப்புக்கென பலரும் உதவ முன்வந்தனர். அவ்வேளையில், நாலந்தா உயர்நிலைக் கல்லூரி பிரதி அதிபர் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவனின் வீட்டிற்குச் சென்று, மாணவனை நேரடியாகப் பாராட்டியுள்ளார்.

அத்துடன், நாலந்தாக் கல்லூரியில் கல்வியைத் தொடரவும் ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகக் கூறினார். மாணவனின் கல்விக்கும், தங்குமிடத்திற்குமான அனைத்து செலவினங்களையும் வசதிபடைத்த பலருடன் நாலந்தா உயர்நிலைக் கல்லூரி முகாமைத்துவம் ஏற்றுள்ளது. மாணவனும் கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வியைத் தொடரப் போகின்றோமென்ற மகிழ்ச்சியில் இருந்து வருகின்றார்.

மகியங்கனைப் பகுதியின் கிராமப்பகுதியொன்றில் ஏழை விவசாயியின் புதல்வனே இம் மாணவனாகுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • MANITHAN
    MANITHAN

    பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்காமல் சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு மனித விழுமியங்களை ஊட்டி அது தொடர்பான அவர்களின் ஊக்கத்தை தட்டிக் கொடுத்து வளர்த்தால் உலகில் எங்குமே வன்முறை இருக்காது.
    நாலாந்தா கல்லூரியின் முயற்சி சிறந்த ஒரு முன்மாதிரி.

    Reply
  • palli
    palli

    இந்த மாணவனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பாராட்ட எதை எழுதுவதென தெரியவும் இல்லை. கடவுள் இருப்பின் அந்த நால்வருக்கும் அந்த மாணவனே கடவுள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உண்மையில் இந்தச் சிறுவனின் தைரியமும் மனிதாபிமானமும் ஆச்சரியப்பட வைக்கின்றது. அந்தச் சிறுவனுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அதுபோல் அந்த மாணவனின் கல்வியில் உதவ முன் வந்த கொழும்பு நாலந்தா கல்லூரியின் உப அதிபர் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆகியோரும் பாராட்டுக்குரியோரே.

    Reply