இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகி முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிய சுசில் பிரேமஜயந்த !

ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சில் இருந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான அவரது சமீபத்திய விமர்சனக் கருத்துகளுக்குப் பின்னர் சுசில் பிரேமஜயந்த உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று கல்வி அமைச்சிற்கு சென்றிருந்த அவர், ஆவணங்களை எடுத்துக்கொண்டு அமைச்சில் இருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேறினார். இதன்போது இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட வாகனத்தையும் ஒப்படைத்திருந்த காரணத்தினால் அவர் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முடிவு குறித்து கட்சிக்குள் முன்னர் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானமோ அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர், நெருங்கிய நண்பன் என்ற வகையில் இந்தச் செய்தியை அறிந்ததும் வருத்தமடைந்ததாக கூறினார்.

அரசியலமைப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அண்மையில் சுசில் பிரேமஜயந்த முன்வைத்த விமர்சனம் காரணமாகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *