“எதிர்க்கட்சியினருக்கு புஸ்வாணம் மாத்திரம் வெடிக்கத் தெரியும்.” – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

“எதிர்க்கட்சியினருக்கு புஸ்வாணம் மாத்திரம் வெடிக்கத் தெரியும்.” என  அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணப் பொதி வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாது என்பதை நிரூபிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நமகால பொருளாதார நிலை தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பது மிகவும் திட்டமிட்ட செயல். இது குறித்து நாங்கள் தம்பட்டம் அடிக்க மாட்டோம். சரியான நேரத்தில் இது குறித்துச் செயற்படுவோம். எதிர்க்கட்சிகள் எப்போதும் இந்த நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. இதுவரை கட்சி சொன்னது, செய்தது எல்லாம் பொய்யாகிவிட்டது. அவர்களுக்கு புஸ்வாணம் மாத்திரம் வெடிக்கத் தெரியும்.

நாட்டிலுள்ள அரச ஊழியர்கள் மற்றும் சமுர்த்தி பெறுனர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. வீட்டுத்தோட்டம் அமைக்கப் பணம் ஒதுக்கப்பட்டது. தோட்டப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறையையும் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவுகளை எடுத்துள்ளோம். இவை தேர்தலை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகள் அல்ல. நாட்டு மக்களுக்கு உரிய நேரத்தில் வழங்கிய நிவாரணங்கள் இவை.

ஜனவரி 15 நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஜனவரி 15 ஆம் திகதி மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதியைத் திறந்து வைப்போம்.

பசில் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் நாடு மீண்டும் அழிக்கப்படும் என்றும்  பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும்  தெரிவித்தனர். இந்தச் சலுகைகளை வழங்குவது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்பதை நிரூபிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *