திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் தேசப்பற்றற்ற தீர்மானங்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தினாலேயே எடுக்கப்பட்டதே தவிர தற்போதைய அரசாங்கத்தால் அல்ல என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் பேசிய போது ,
அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள சாதகமான தீர்மானங்களை பாராட்டுவதற்குத் தயார். பாதகமான மற்றும் தீங்கு விளைவிக்கும் விடயங்களை தொடர்ந்து விமர்சிப்போம்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் போது அனைத்து எண்ணெய்த் தாங்கிகளும் முதன்முதலில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது சில அமைச்சர்கள் அந்த வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் 90% தாங்கிகள் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உடன்படிக்கையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை முன்னிலைப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.