எனது 5 வருட பதவிக் காலத்தில் கடந்த இரண்டு வருடங்களில் வெளிநாடுகளிலிருந்து எந்தவொரு கடனையும் பெறவில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சியம்பலாண்டுவவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்கு புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்கள் பாரிய பிரச்சினையாக காணப்படுவதைக் கருத்திற் கொண்டு நல்ல நோக்கத்துடன் சேதன உரங்களை பயன்படுத்துவதற்குத் தான் விவசாய சமூகத்தினரிடையே முன்மொழிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சேதன உரம் என்பது உரம் மாத்திரம் அன்றி ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் அபிவிருத்தியடைந்த தொழில்நுட்பமாகும். பயிர்ச்செய்கைக்காக பெருமளவிலான விவசாயிகள் சேதன உரங்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும் விவசாய சமூகத்துக்குத் தேவையான அறிவை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை.
நெல்லுக்கு 50 ரூபா சான்றளிக்கப்பட்ட விலையுடன் கடந்த இரு வருடங்களாக உரங்களை இலவசமாக வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை உறுதி செய்யும் போது வாழ்க்கைச் செலவு மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரினதும் ஆதரவு முக்கியமானது என்றார். தடுப்பூசிகள் மற்றும் உர விநியோகம் உட்பட பெரும்பாலான அம்சங்களில் இராணுவத்தினரின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர் அரசாங்கத்தை விமர்சித்தால், அவர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வகையில் தம்மையே விமர்சிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்மானம் எடுப்பதில் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது.
தற்போதைய நிர்வாகம் ஐந்தாண்டு பதவிக் காலத்திற்கான அனைத்து இலக்குகளையும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அடையும் என ஜனாதிபதி பொது மக்களுக்கு உறுதியளித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் எதிர்நோக்கிய சவால்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திருப்பதாகவும், அரசாங்கத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் உதவ வேண்டிய பொறுப்பு உள்ளது. மக்களுக்கு சேவை செய்வதற்கு அமைச்சுப் பதவிகள் மாத்திரம் தேவையில்லை.
குடிமக்களுக்காக பணியாற்றுவதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதிகாரிகளின் முழு ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி இதன் போது அழைப்பு விடுத்துள்ளார்.