தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகள் தெற்கில் எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன நேற்றுக் கூறினார். இது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: புலிகள் இப்போது தோல்வியின் விளிம்பில் இருக்கின்றனர். அவர்களால் படையினருக்கு எதிராக எந்தவிதமான தாக்குதல்களையும் நடத்த முடியாது. விரக்தியிலும் கடும் கோபத்திலும் உள்ள புலிகள் தெற்கில் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். இது தொடர்பாகத் தென்பகுதி மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். கொழும்பு மக்களும் மிக விழிப்புடன் இருக்க வேண்டும்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு எம்மிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. ஐரோப்பிய ஒன்றியம் கூட ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு புலிகளுக்கு அழுத்தங் கொடுக்கத் தொடங்கியுள்ளது.எமது நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எமது யுத்த நடவடிக்கை தொடர்பில் சர்வதேச நாடுகளும் திருப்தியடைந்துள்ளன என்பது இதன் மூலம் தெரிகின்றது.
தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்றால் அதைத் தாம் வழங்குவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அப்படியென்றால் அக்கட்சி அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
என்றார்.