கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா – பொருளாதார தடை விதித்த அமெரிக்கா !

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நாட்டின் இராணுவத்திறனை வலுப்படுத்துவதில்தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணையை வட கொரியா சோதித்தது.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது.
இதன் காரணமாக  அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை திட்டங்களுக்கான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெறுவதில் அவர்கள் ஆற்றிய பங்குக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகார வரம்புக்குள் இருக்கிற இந்த 5 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் கடும் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  மேலும், ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ச்சியாக இதுபோன்ற மோதல் போக்குடன் செயல்பட்டால் கடும்  விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் எனவும் பகிரங்க எச்சரிக்கையை  கிம் ஜாங் உன் அரசு விடுத்துள்ளது. வடகொரியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பெயரில் இந்த எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *