13ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட சதி எனவும் அதற்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி மிக மோசமாக ஆவணம் தயாரிக்கப்பட்ட நிலையில், அதன் மூலம் சுயநிர்ணய உரிமையை தமிழ் மக்கள் அனுபவிக்கலாம் எனக் கூறுமளவுக்கு இந்த துரோகத்தனம் போகின்றது. புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுகின்ற பொழுது 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோருவது, இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாக உலகத்துக்கு காட்டும் நடவடிக்கையே ஆகும்.
இந்த விடயத்தை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாம் மீண்டும் மீண்டும் கூறுவதென்றால் இந்திய முகவர் அமைப்புக்கள் 12 வருடங்களாக மக்களிடம் பொய் சொல்லியதை இன்று உணரக்கூடியதாக உள்ளது. 13ஆம் திருத்தத்திற்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடங்குவதாக 12 வருடத்துக்கு முன் நாங்கள் சொன்ன பொழுது மக்கள் அதனை நம்பவில்லை. இன்று அதனை வெளிப்படையாக நிரூபிக்கும் வகையிலேயே காரியங்கள் நடைபெறுகின்றன.
ஒரு தேர்தல் முடிவடைந்து இன்னொரு தேர்தல் நடக்க இன்னும் சில வருடங்கள் இருக்கும் நிலையில் இலங்கை முகவர்கள், இந்திய முகவர்கள் இணைந்து 13ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்கின்ற நிலை உருவாகியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையை பெற்ற தமிழ் தரப்பும் 13ஆம் திருத்தத்தையும் ஒற்றையாட்சியையும் ஏற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்.
இதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களை அணிதிரட்ட முடிவெடுத்து இருக்கின்றது. அந்த வகையிலே எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி போராட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள இருக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதனைக் கொண்டு செல்ல இருக்கின்றோம். இதனை முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் செய்ய இருக்கிறோம். இதனை கிராம ரீதியாகவும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். எமது கட்சி உறுப்பினர்கள் மூலம் கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்தும் உறுதியாக இருக்கின்ற அனைத்து மக்களையும் அரவணைத்து இதனை நாங்கள் மேற்கொள்வோம்.
13ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்கு உருவாக்கப்பட்ட சதி. அந்தச் சதியில் இருந்து முப்பது வருடங்களுக்கு மேலாக உயிர்த்தியாகம் செய்து ஏதோ ஒரு வகையில் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றோம். இந்த சதியை நாங்கள் மக்களாலேயே முறியடிக்க வேண்டும்” என்றார்.