” அவர்களின் தாத்தாவும், அப்பாவும் எமது மக்களை ஏமாற்றியதுபோல பேரனும் இப்போது ஏமாற்றி வருகின்றார். நான் அமைச்சராக இருந்த போது நிர்மாணித்த வீடுகளின் சாவிகளை பலவந்தமாக பெற்று அதனை மக்களுக்கு மீள வழங்கும் அரசியலே முன்னெடுக்கப்படுகின்றது.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறிய போது ,
” நல்லாட்சியே மலையகத்துக்கு பொன்னான காலம். அக்காலத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதைய கோட்டா அரசானது, மலையகத்துக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்குமே சாபக்கேடானதாகும். மக்களுக்கு பல பிரச்சினைகள். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
கூட்டு ஒப்பந்தம் இருந்தால்தான் மலையக மக்களின் பிரச்சினை தீருமென சிலர் கொக்கரித்து வருகின்றனர். தாத்தா, அப்பா ஏமாற்றியதுபோல பேரனும் எமது மக்களை ஏமாற்ற முற்படுகின்றார். அதனால்தான் நாங்கள் கட்டிய வீடுகளுக்கு, திறப்பு விழா நடத்துகிறார். அதுவும் சாவிகளை பலவந்தமாக பறித்தெடுத்து மீள வழங்கப்படுகின்றது. எமது மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை வருங்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாச மீண்டும் வழங்கியுள்ளார். இந்த ஆட்சியின் கீழ் எமது மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. புதிய ஆட்சியின்கீழ் மலையக மக்களுக்கு எல்லாவற்றையும் பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.