முதலாம் வருட மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய விரிவுரையாளர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சம்பவம் !

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள முதலாமாண்டு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், குறித்த விரிவுரையாளரின் விருப்பத்துக்கு இணங்காத அந்த மாணவி  பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறியதாகவும் அறிய முடிகிறது.

இந்த நிலையில், மேற்படி விரிவுரையாளரால் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் பற்றி, அந்த மாணவி தனது குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தியதோடு, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எழுத்து மூலம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து இவ்விவகாரத்தில் கவனம் செலுத்திய பல்கலைக்கழக உபவேந்தர், அந்தப் பல்கலைக்கழத்தின் பேரவையைக் கூட்டி – விடயத்தைத் தெரியப்படுத்தியிருந்தார். அதனையடுத்து, ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, குறித்த விரிவுரையாளரை – பல்கலைக்கழகப் பேரவை, பணி இடைநீக்கம் செய்துள்ளதோடு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பேரவை உறுப்பினர் ஒருவரையும் நியமித்துள்ளது

இந் நடவடிக்கைகளுக்கு முன்னர், குறித்த மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சம்பந்தப்பட்ட விரிவுரையாளர், தான் தவறாக நடந்து கொண்டமையை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கேட்டு, அழுது – மன்னிப்புக் கோரியதாகக் கூறப்படுகிறது. அது குறித்த குரல் பதிவுகள் பிபிசிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவி, சம்பந்தப்பட்ட விரிவுரையாளருக்கு எதிராக செய்த முறைப்பாட்டை மீளப் பெற்றுக் கொள்வதாக, தற்போது பல்கலைக்கழகத்துக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இதனை பல்கலைக்கழகத்தின் நிா்வாகம் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச் சந்தித்த ஒரு தரப்பினர், கருணை அடிப்படையில் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக, அந்த மாணவி தனது முறைப்பாட்டை மீளப் பெறுவதற்கான கடிதத்தை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பந்தப்பட்ட மாணவி தனது முறைப்பாட்டை மீளப்பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், இவ்விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் இதற்கு முன்னரும், மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டுக்குள்ளான சிரேஷ்ட விரிவுரையாளரொருவர், பணியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம் – பிபிசி தமிழ்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *