“நாளாந்தம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி உதவிகளுக்காகக் காத்திருக்கிறது இலங்கை.” – நாடாளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் !

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில், வடக்கு கிழக்கு மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தற்காலிகமாகவேனும் தமிழ் கட்சிகள் தங்களது கொள்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதியால் நேற்று நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க உரை தொடர்பாக விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பான இரண்டு நாட்கள் ஒத்திவைப்பு விவாதத்தின் முதல்நாள் விவாதம் இன்று இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதியின் உரையில் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் பற்றிய பார்வை எதுவும் இருக்கவில்லை என்று தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்த போது,

இந்த முழுமையான உரையில் ஓரிடத்தில் நாட்டில் வெளிநாட்டு நாணயம் தொடர்பான பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டதைத் தவிர பிரிதொரு விடயமும் இல்லை. நீண்டகாலமாக நாட்டில் இருக்கின்ற பிரச்சினையென ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு, அது கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த பல அரசாங்கங்களினாலும் தீர்க்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி அதன் மூலம் அந்த பிரச்சினையை இன்னொருவர் தோளில் சாட்டவே ஜனாதிபதி முயன்றுள்ளார்.

ஆனால் பிரச்சினையை அடையாளம் கண்ட அவர் தீர்வினையோ அல்லது தீர்வினை அடைவதற்கான வழிமுறைகளையோ முன்வைக்கத் தவறிவிட்டார். ஜனாதிபதி தமது உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது இந்தியாவிலிருந்து 500 மில்லியன் டொலர் உதவி கிடைத்திருப்பதாகச் செய்தி வெளியானது.

இந்த உதவியானது இலங்கையின் பிச்சைப் பாத்திரத்தில் விழுந்துள்ள மற்றுமொரு பொதியாகும். நாளாந்தம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி உதவிகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைமையே நாட்டில் இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையை நாடு சந்தித்திருக்கும் போது அதற்கான தீர்வு எதுவும் உள்ளடங்காத உரையாகவே ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை அமைந்திருந்தது.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பற்றிப் பேசும் போது, தாம் உரையை ஆரம்பித்த விதத்தை மறந்து, அந்த மக்களை அவமதிக்கும் வகையில் உரையாற்றினார் என அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *