முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு காவற்துறையினரால் 24.12.21 அன்று கைது செய்யப்பட்டிருந்தார்.
பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து 24.12.21 அன்று முல்லைத்தீவு காவற்துறையினரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் 25.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 04.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து 04.01.2022 குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்த முல்லைத்தீவு நீதிபதி குறித்த நபரை இன்று 18-01-2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணைகளை 18-01-2022 இன்றைய தினத்துக்கு தவணையிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த ஆசிரியர் ஐந்து இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையிலும் 25000 காசு பிணையிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் 9 தொடக்கம் 12 மணிக்குள் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் ஒப்பமிடுமாறும் சாட்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட கூடாது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் 05.04.2022 ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.