யேமன் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதல் – 100பேர் வரை உயிரிழப்பு !

வடக்கு யேமனில் உள்ள தடுப்பு முகாம் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 100பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 138பேர் காயமடைந்தனர்.

ஹெளதி கிளர்ச்சியாளர்களின் கோட்டையான சாதாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கைக் கட்டுப்படுத்தும் ஹெளதி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் தாஹா அல்-மோட்டவாகல், இதனை உறுதிப்படுத்தினார். காயமடைந்தவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹெளதிகள் முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தி, சவுதி நகரங்களில் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவிய பின்னர், ஹெளதி கிளர்ச்சி இயக்கத்துடன் தொடர்புடைய இராணுவ இலக்குகள் என்று சந்தேகிக்கும் நிலைகள் மீது சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், தெற்கே முக்கிய துறைமுக நகரமான ஹொடைடாவில், ஹெளதிகளால் வெளியிடப்பட்ட காணொளி இடிபாடுகளில் இருந்த உடல்களைக் காட்டியது மற்றும் சவுதி தலைமையிலான கூட்டணி ஒரு தொலைத்தொடர்பு மையத்தை தாக்கியது. யேமன் நாடு தழுவிய இணைய முடக்கத்தை சந்தித்தது.

தென்மேற்கு ஆசிய நாடான யேமனில், சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹெளதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் செயற்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

யேமனில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யேமன் போரில் இதுவரை குழந்தைகள் உட்பட 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் பெரும்பாலான மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் நிற்கின்றனர்.

இந்நிலையில், யேமன் மீது சவுதி விமான தாக்குதல் நடத்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏமன் நாட்டுப் பொதுமக்கள் மீது குண்டுமழை பொழிவதை ஏற்கமுடியாது என சவுதி அரேபியாவிற்கு கண்டனம் தெரிவித்தார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *