யுத்த நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பைப் பயன்படுத்தி, இலங்கை அரசு யுத்தத்தை இடைநிறுத்த வேண்டும் என்றும், யுத்தப் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டுக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இது விடயமாக பி.பி.ஸி. தமிழோசை கருத்துத் தெரிவிக்கையில், மோதல்களை இடைநிறுத்த வேண்டும் என்று இந்தியா அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைப்பது இதுவே முதல் முறை எனக் குறிப்பிட்டிருந்தது. தூத்துக்குடி அனல் மின் நிலையம் அருகே ரூ.4 ஆயிரத்து 900 கோடி மதிப்பில் மேலும் ஒரு அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, புதிய மின் நிலையத்துக்கு (28) அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து குறிப்பிட்டார்.பிரணாப் பேசுகையில், ”இலங்கையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து இந்தியா கவலை கொண்டிருக்கிறது. போர் பிராந்தியத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன” பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிப்பது குறித்தும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் இந்தியா தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளைச் சுட்டிக்காட்டியுள்ள பிரணாப் முகர்ஜி, அது, அவர்கள் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இல்லை என்பதை உணர்த்திலும் கூட, இலங்கை அரசு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, யுத்தத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்பது எங்கள் கருத்து என்றும் தெரிவித்துள்ளார்.
”எனவே, போர் பிராந்தியத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டுக் கொண்டுவருவது குறித்த நடைமுறைகளை இலங்கை அரசு உடனடியாக வகுக்க வேண்டும்” என்று இந்தியா கோரிக்கை விடுப்பதாக பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஏற்பாட்டுக்கு, விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பிரணாப் முகர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.
மோதல் நிறுத்தப்படும் சூழ்நிலையைப் பயன்படுத்தி, போர்ப் பகுதியில் உள்ள பொதுமக்களை, மறுவாழ்வுக்கு உகந்த பகுதிகளுக்குக் கொண்டுவர வேண்டும். அங்கு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச உதவி அமைப்புக்கள் பணியாற்றவும், மருத்துவ மற்றும் பிற மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கும் தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
வட இலங்கையில், உள்நாட்டில் புலம் பெயர்ந்த மக்களுக்கு அவசர மருத்துவக் குழுக்களையும், மருந்துகளையும் அனுப்புவதற்கு இந்தியா ஏற்பாடு செய்து வருவதாக வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
”அடுத்த கட்டமாக, மாகாணங்களுக்கு அதிகாரங்களை முறையாகப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அப்போது, ஒன்றுபட்ட இலங்கைக்குள், அதன் அரசியல் சட்டத்தின் அடிப்படையில், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்குவதற்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்” என்று பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த உண்மையான கோரிக்கைக்கு, இலங்கை அரசும், சம்பந்தப்பட்ட மற்ற தரப்பினரும் செவிமடுப்பார்கள் என்று நம்புவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் விளக்கம்.
வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பொருத்தமான நம்பகத்தன்மை மிக்க நடைமுறை ஒன்றை வகுக்குமாறு இலங்கை அரசைக் கோரியுள்ள இந்தியா, காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை வழங்கத்தான் தயார் என்றும் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைத்துள்ள சாதகமான பதில்களைத் தொடர்ந்தே இந்தியா இந்த வேண்டுகோளை விடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
“மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அனுமதிக்குமாறு சர்வதேச சமூகம் விடுத்துள்ள வேண்டுகோள்கள் குறித்து ஆராயத் தயார் என்ற தனது விருப்பத்தை விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தப் பின்னணியில் நாட்டுக்குள் இடம்பெயர்ந்த அகதிகளின் நகர்வுகளை சர்வதேச முகவர் அமைப்புகள் கண்காணிப்பது உட்பட்ட விடயங்கள் அடங்கியதாக அந்த அகதிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்பது தொடர்பான நம்பகமான, பொருத்தமான நடைமுறைத் திட்டம் ஒன்றை உருவாக்குமாறு இலங்கை அரசையும் ஏனைய தொடர்புபட்ட அனைவரையும் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.” என விஷ்ணு பிரகாஷ் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு வலயத்தின் புனிதத்தை இரு தரப்புகளும் பேணவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பெரும் எணணிக்கையான மக்களைக் கடல் மற்றும் தரை வழியாகக் கொண்டு வருவதற்குரிய நடைமுறைகளை வகுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளை அவர் கேட்டுக்கொண்டார்.
அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனைத்து ஒத்தாசைகளையும் மற்றும் மனிதாபிமான உதவிகளையும் இந்தியா வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகவீனமுற்றுள்ள காயமடைந்துள்ள மக்களுக்கான மருத்துவ உதவிப் பொருள்கள் அவர்களுக்கு விரைந்து கிட்டுவதற்கான வகையில் அனுப்பி வைப்பதற்கான நடைமுறைகள் குறித்து இலங்கை அரசுடன் இந்தியா கலந்துரையாடி வருகின்றது” என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசின் நிலைப்பாடு
இது குறித்து இச்செய்தி எழுதப்படும் நேரம்வரை இலங்கை அரசு எவ்வித உத்தியோகபூர்வமான அறிவித்தல்களையும் விடுக்கவில்லை.
“யுத்தம் தீர்வல்ல’ டில்லி கொழும்புக்கு தெரிவிப்பு
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதலுக்கிடையில் சிக்கியிருக்கும் அப்பாவிப் பொதுமக்களின் தலைவிதி குறித்து கவலைதெரிவித்திருக்கும் இந்தியா, பொது மக்கள் இழப்புகளை தடுத்து நிறுத்துவதற்கு சாத்தியமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கொழும்பைக் கேட்டிருக்கிறது.
அத்துடன் இலங்கையின் சகல பிரஜைகளினதும் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடியதான அரசியல் தீர்வை வட இலங்கைக்கு முன்வைக்கும் முழுமையான ஜனநாயக நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுமென இந்தியா எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஈ.அகமட் நேற்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
கொழும்பில் நடைபெற்ற சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பின் நேற்றுநாடு திரும்பிய அகமட் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்ததாக பி.ரி.ஐ. செய்திச் சேவை தெரிவித்தது.
தனது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அகமட் சந்தித்திருந்தார்.
பிரச்சினைக்கு யுத்தம் தீர்வு அல்ல என்பதை இலங்கைக்கு நாம் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது, பொது மக்களின் பாதுகாப்புத் தொடர்பான இந்தியாவின் கரிசனையையும் தெரியப்படுத்தியதாக அவர் கூறியிருக்கிறார்.
பொதுமக்கள் இழப்புகள் குறித்து இலங்கை ஜனாதிபதியும் கவலையை வெளிப்படுத்தியதாகவும் பொதுமக்களுக்கு நிவாரணமளிக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விபரத்தையும் தெரிவித்ததாகவும் அகமட் கூறியுள்ளார்.
யுத்த வலயத்திலிருந்து வரும் மக்களுக்கான அவசர மருந்து உதவி அனுப்பிவைக்கப்படும் என்று கூறிய அகமட், பொதுமக்களுக்கு நிவாரணமளிக்க இலங்கைக்கு உதவுவதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வைகோ குழு கைது.
அதேநேரம், நேற்று (28) தூத்துக்குடியில் ஆயிரம் மெகாவாட் திறன் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தூத்துக்குடி வந்தநேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்காத வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட்ட 185 பேர் நேற்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விழா நடைபெற்ற ஏ.பி.சி. மகளிர் கல்லூரி விளையாட்டுத் திடலுக்கு ஊர்வலமாகப் புறப்பட்ட நேரத்திலே அவர்களை காவல்துறையினர் வழியில் மடக்கி கைது செய்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் தமிழீழநேயன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் செந்தமிழ்பாண்டியன், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஞானதாஸ், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் வரதராசன், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபு உட்பட 185-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தூத்துக்குடி 2 ஆவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்குக் கொண்டுசென்று அடைக்கப்பட்டனர்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்பு வரவுள்ளார்
அதேநேரம், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்பு வரவுள்ளார் என்ற செய்தியையும் இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து போர் முன்னேற்றம் குறித்து விவாதிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்து இந்தியாவின் கவலையை அவர் இலங்கை அரசுக்குத் தெரிவிப்பார் எனவும் தற்போது நடைபெற்று வரும் மோதல்களுக்கான அரசியல் தீர்வு குறித்துப் பேச்சுக்களை நடத்துவார் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தொடரை தொடர்ந்து ராஜபக்சவை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்திப்பதாக திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் தனது பயணத்தை பிரணாப் முகர்ஜி ரத்து செய்து விட்டார். இதையடுத்து மேனன் கொழும்பு சென்று ராஜபக்சவை சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Thambiah Sabarutnam
புலிகளின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை எடுத்துப்பார்க்கையில் வன்னியில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் யுத்தமானது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. ஒரு விடுதலை போராட்டம் என்பது அடிப்படையில் மக்களுக்கானது. எனவே அது முழுக்க முழுக்க மக்களை சார்ந்தே நிற்கவேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் புலிகளின் அகங்கார அதிகார நலன்களுக்குமிடையே பாரிய முரண்பாடு காணப்படுகிறது. புலிகள் தமது கேள்விக்கிடமற்ற அதிகார அகங்கார நலன்களையே சுயநிர்ணய உரிமை என்கிறார்கள். அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்னும் பட்டுத் துப்பட்டாவினால் புலிகள் தமது குரூர சொரூபத்தை மூடி மறைக்க முயல்கிறார்கள். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களின் சகல ஜனநாயக உரிமைகளையும் உள்ளடக்கியது.
மக்கள்மீது நம்பிக்கையில்லாமல் அவர்கள்மீது அடக்குமுறை செலுத்தும் புலிகள் ஆயுதங்கள்மீது மட்டுமே தமது முழு நம்பிக்கையையும் வைத்து வந்துள்ளனர். மேலும் ஒரு விடுதலை போராட்டத்தின் வெற்றி என்பது தனது பிரதான எதிரி யார்; என்பதை இனம்காண்பதிலேயே தங்கியுள்ளது. ஆனால் புலிகள் சாதாரண தமிழ்-சிங்கள-முஸ்லீம் மக்களை எதிரியாக தீர்மானித்து அவர்கள் மீது தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். ஒரு விடுதலை இயக்கம் தனது சொந்த மக்களை மட்டுமல்லாது நீதியை விரும்பும் அனைத்து மக்கள் உட்பட சகல வளங்களையும் திரட்டிப் போராடாமல் ஒருபோதும் வெற்றிபெறமுடியாது என்பதை உலகின் பல விடுதலைப்போராட்டங்கள் நிரூபித்துள்ளன. ஆனால் புலிகளோ தமிழ் மக்களின் விடுதலைக்காக போராட புறப்பட்ட பல போராளிகள் ஜனநாயகவாதிகள் கல்விமான்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோரை கொன்றுகுவித்து தமது எதேச்சாதிகார ஏகத்தலைமையை மக்கள்மீது திணித்துள்ளனர்
anna
இந்திய மத்திய அரசும் இலங்கைத் தமிழர்களும்:வெகுஜனன்
இந்திய மத்திய அரசு இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தனது பிராந்திய நலனை முதன்மைப்படுத்திய கொள்கையையே எப்பொழுதும் முன்னிறுத்தி வந்திருக்கிறது. தென் ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமன்றி, முழு ஆசியாவிலும் தனது ஆதிக்கத்தை விரிவாக்கும் நோக்குடனேயே அதன் கொள்கை வகுப்பு இருந்து வருகிறது……………………….. http://inioru.com/?p=1990
thampi
இலங்கைப்போரை பின்னனியிலிருந்து இயக்குவதே இந்தியாதான்: விக்கரமபாகு கருணாரத்ன
on 01-03-2009 00:03 Published in: செய்திகள், இலங்கை
இலங்கையில் தமிழ் மக்கள் நாளாந்தம் கொன்றொழிக்கப்படும் கொடும் போரை சிறீலங்கா அரசு அன்றி, இந்தியாவே நடத்தி வருவதாக, இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அரசும் வெறும் பொம்மைகளாக இருக்க, அவர்கள் மூலம் இந்தியாவே போரை திட்டமிட்டு நடத்தி வருவதாகவும், இதனாலேயே அனைத்துலக நாடுகள் இதில் தலையிடுவதில் இராசரீக சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உலகின் இடதுசாரிகள், மற்றும் தொழிற்கட்சிகளை உள்ளடக்கிய நான்காம் மண்டல அமைப்பின் அனைத்துலக மாநாடு கடந்த 21ஆம் நாள் முதல் 25ஆம் நாள்வரை நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையில் இடம்பெறும் போர் பற்றி பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்ததுடன், அங்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக ஈழப்பிரச்சினை பற்றி ஊடகவியலாளர்கள் மாநாடும் நடைபெற்றிருந்தது. இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கருத்துரைத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, ஈழத்தமிழ் மக்களிற்கான உரிமைகள் மறுக்கப்பட்டதாலேயே அவர்கள் பெரும்பான்மை சிங்கள அரசுக்கு எதிராகப் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் எனவும், மக்களின் ஆதரவுடன் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் போராட்டத்தை சிறீலங்கா அரசினால் அடக்கிவிட முடியாத எனவும் குறிப்பிட்டார்.
வன்னியில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதாகக் கண்டனம் தெரிவித்த அவர், போரை நிறுத்தி பேச்சுக்குச் செல்லுமாறு சிறீலங்கா அரசுக்கு அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஏகாந்தி,
புலிகள் அமைப்பு ஆயுதங்களை கீழே போட்டால் அன்றி யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.
சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் வெளிவிவகார அமைச்சர்களின் 31வது மாநாடு நேற்று மாலை நிறைவடைந்ததனை அடுத்து அதன் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பு இன்ட்கொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மாதம் 32 ஆயிரம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பி வரும் மக்களை பாதுகாப்பதற்கு அரச படைகளும் அரசாங்கமும் தயாராவுள்ளன. அவர்கள் வருவதற்கான பாதை எந்த நேரத்திலும் திறந்தே உள்ளது. நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சார்க் நாடுகள் ஒன்றினைந்து நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. குறிப்பாக பயங்கரவாதத்தினை ஒழிப்பதில் நாம் அனைவரும் கூட்டாக செயற்படப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன்
புலிகளுக்கெதிரான போர் முடிய, தானாக போர் நிறுத்தம் வந்துவிடும்.
Kusumbo
இந்தியா இந்தச்சண்டையை நிறுத்தப் போறதில்லை. போனமுறையும் முல்லைத்தீவுவரை போய் தம்பியைப் பிடிக்கற அளவுக்கு வந்தவை. பின் ஏன் விட்டுவிட்டுப் போனவை. பிடிச்சிருக்கலாம்தானே. ஆயுதம் விக்கிறதுக்கும் ஆதிக்கத்தைச் செலுத்திறத்துக்கும் போர் நடந்தால் தானே நல்லது. புலிகள்தான் போரை நிறுத்தி அரசோடை ஒத்துப்போனாலும் இந்தியா விடாது. இந்தியா கீரோ ஆகவேணும் எண்டால் எழுபட்ட தமிழன்தான் சரி. அரசாங்கம்தான் தமிழீழத்தைத் தம்பி வேலுப்பிள்ளையின் மகன்ட்டைக் குடுத்தாலும் இந்தியாவிடாது. சண்டையை இந்தியாவிலை சின்னப்புலி திருமாவளவனிடைக் குடுத்துப்போட்டு கொஞ்சக்காலம் பிரபாகரன் அட்வைசராக ஒய்வெடுக்கலாம். சீமானும் வைகோவும் இருக்கேக்கை பிரசாரப்பீரங்கிகள் கதறுமெல்லே.