கடவத்தையில் இளைஞன் ஒருவர் கண்ணாடித் துண்டால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடவத்தை என்ட்ரூஸ் லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடவத்தையிலுள்ள வாடகை வீடொன்றில் நேற்று (22) காலை ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 20 வயதுடைய கோனஹேன பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. 19 வயதுடைய சந்தேகநபர் கடவத்தை பகுதியில் வைத்து கண்ணாடித் துண்டுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி குறித்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த அறையில் சிறுமியும் அவரது முன்னாள் காதலனும் ஒன்றாக இருந்ததை கண்ணுற்ற தற்போதைய காதலன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் கடவத்தை கோனஹேன பகுதியைச் சேர்ந்த ராஜு மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்றிரவு கடவத்தையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் தனது முதல் காதலனைப் பார்த்து மீண்டும் குறித்த பெண் உறவை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இருவரும் அவள் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதுபற்றி கேள்விப்பட்டதும் கொலை செய்த இளைஞன் அதிகாலை 3 மணியளவில் சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்ததை அடுத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
சிறுமி சிறுவர் புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பி வந்து வாடகை அறையில் தங்கியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் கொலை இடம்பெற்ற விதம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.