“இனியும் ராஜபக்ஷக்களிடத்தில் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது .” – இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு !

“இனியும் ராஜபக்ஷக்களிடத்தில் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது .” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக சாடியுள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வினை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பிலும்ரூபவ் அடுத்து வரும் காலத்தில் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் குறித்தும் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையினால் தான் போர் இடம்பெற்றது என்பதை ஜனாதிபதி மறந்து விடக்கூடாது. போரின் காரணமாகவும் அக்காலத்தில் இடம்பெற்ற ஆயுதக் கொள்வனவுகளில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் காரணமாகவுமே நாடு மீள முடியாத பொருளாதார வீழ்க்குள் சென்றுள்ளது.

செல்வநாயகம் போன்ற தலைவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனக் குழுமத்தினரும் சமத்துவமாகவே விரும்பினார்கள். அதற்கான ஒப்பந்தத்தையும் செய்தார். ஆனால் அவர் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டு தென்னிலங்கை பெரும்பான்மைத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டார்கள்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு பதிலாக அதனை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கினார்கள்.

இதன், விளைவாக இளைஞர்கள் ஆயுதங்களை கையிலெடுத்து தனிநாடு கோரி போராடினார்கள். இந்த ஆயுதப்போராட்டம் 2009ஆம் ஆண்டு வரையில் நீடித்தது. அந்த ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு தற்போது 12ஆண்டுகள் கடந்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக் கோரிக்கையை நாம் அழுத்தமாக முன்வைத்து வருகின்றோம்.

இவற்றையெல்லாம் மறந்து விட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டில் இனப்பிரச்சினை இல்லாதது போல் கருத்துக்களை வெளியிடுகின்றார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் கருதுவது அவருடைய உரையில் மிகத் தெளிவாக உள்ளது.

அவ்விதமாக அவர் கருவாராக இருந்தால் அது அவர் காணும் பகற்கனவாகும். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாது வேறு எந்த விடயங்களிலும் நிரந்தரமான தீர்வினை அடைய முடியாது. இது ஜனாதிபதிக்கு புரியவில்லை. அவர், தான் பெரும்பான்மை மக்களினதும்,  கடும்போக்கு பௌத்த தலைவர்களினதும் ஆதரவோடு ஆட்சிப் பீடம் ஏறியவர் என்பதால் அவர்களை மட்டும் திருப்திப் படுத்தினால் போதும் என்று கருதுகின்றார். அவர் அதனை பல இடங்களில் வெளிப்படுத்தியும் உள்ளார்.

ஆனால் அவர் ஒரு விடயத்தினை நினைவில் கொள்ள வேண்டும். அவர்(கோட்டாபய) உட்பட அவருடைய சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா, பிரேமதாஸ, என்று அனைத்து தலைவர்களும் தேசிய இனப்பிரச்சினை காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதனால், அவர்கள் உள்ளுரிலும் சர்வதேச அரங்குகளிலும் சர்வதேச நாடுகளிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள். அவ்வாறிருக்கையில் ஜனாதிபதியாக இருக்கும் கோட்டாபய திடீரென்று விழித்தெழுந்தவர் போன்று எவ்வாறு இனப்பிரச்சினையே இல்லை என்று கூற முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ராஜபக்ஷக்கள் மீண்டும் பதவிக்கு வந்ததன் பின்னர் அவர்களின் போக்கு நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. இனியும் இவர்களிடத்தில் நீதி, நியாயம் ஆகியவற்றை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கப்போவதுமில்லை.

ஆகவே, தமிழ் மக்களின் ஆணைபெற்றவர்கள் என்ற அடிப்படையில் உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டினை நாம் கோருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டோம். சர்வதேச நாடுகள், அமைப்புக்கள், அனைத்தினதும் கவனத்திற்கு இந்த விடயத்தினை நகர்த்தவுள்ளோம்.

தற்போதைய நிலையில் நாடு பொருளாதார நிலையில் மீளமுடியாத நிலையில் உள்ளது. இதற்கு காரணம் போர். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கியிருந்தால் இந்த போரே மூண்டிருக்காது. இந்தப் போரினால் பல்வேறு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுக்கான பரிகாரங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.

இதேநேரம், இந்தப் போருக்காக அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவழித்துள்ளது. இதானால் பொருளாதாரம் மெல்லமெல்ல சரிந்து தற்போது மோசமடைந்துள்ளது. குறிப்பாக போர்க்காலத்தின்போது வரையறைகளின்றி ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. அச்சமயத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தினை வெகுவாக தாக்கியுள்ளது.

ஆகவே தேசியப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காது நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. தென்னிலங்கை பெரும்பான்மை மக்களையும்ரூபவ் பௌத்த தேரர்களையும் மையப்படுத்தி தமது விரும்பத்திற்கேற்றவாறாக ஆட்சியை முன் கொண்டு செல்வதானது எதிர்காலத்திற்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் கூட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரையில் நிறைவேற்றப்பட்ட 46.1 தீர்மானத்தில் எதனையுமே நடைமுறைப்படுத்தாது உள்ளது. இதனை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *