சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக திருத்தப்படுகிறதாம் இலங்கையின் பயங்ரவாத தடைச்சசட்டம் !

புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாட்டின்போது, வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஜனவரி 26 ஆம் திகதி உரையாற்றினார்.

தற்போதைய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட வழக்கமான விளக்கங்களின் தொடர்ச்சியாக, முழு இராஜதந்திரப் படையினரையும் சந்திப்பதற்கான வாய்ப்பை வெளிநாட்டு அமைச்சர் பாராட்டினார். பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பகிர்வதே இன்றைய மாநாட்டின் நோக்கமாகும்.

மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் 2021 அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். இந்த சூழலில், சர்வதேச சமூகத்துடனான ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் சார்ந்த உணர்வுடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டை அமைச்சர் குறிப்பிட்டார்.

பொறுப்புக்கூறல், நீதி மறுசீரமைப்பு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளினூடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், தற்போது ஏற்பட்டுள்ள உறுதியான முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கிணங்க, கடந்த வருடத்தில் உள்நாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பான விளக்கங்கள் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் தலைவி திருமதி தாரா விஜயதிலக, நிலையான அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி சாமிந்திரி சப்பரமாது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. தீப்தி லமாஹேவா, காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டப் பிரிவின் தலைவர் திரு. த. தப்பரன் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கான பணிப்பாளர் திரு. நிஹால் சந்திரசிறி ஆகியோரினால் வழங்கப்பட்டன.

43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இறுதி அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *