புலிகள் ஆயுதங்களை கீழே வைக்காத நிலையில் யுத்த நிறுத்தமொன்றை முன்னெடுப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லா கம கூறினார். அப்பாவி தமிழ் மக்கள் புலிகளினால் பாதிக்கப்படுவதை நிறுத்துவதற்காகவே இலங்கையில் யுத்தம் இடை நிறுத்தப்பட வேண்டுமென இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளதே தவிர புலிகளுக்கு சார்பாக வல்ல எனவும் அமைச்சர் போகொல்லாகம சுட்டிக் காட்டியுள்ளார்.
வன்னியில் புலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்களை மீட்பதற்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்து வருகின்றன. பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் என்னுடன் தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு இலங்கை நிலைவரங்கள் தொடர்பாகக் கேட்டறிந்ததாகவும் கூறினார்.
மோதல்கள் இடம் பெற்று வரும் பகுதிகளில் 30 சதுர கிலோமீற்றர் நிலப் பரப்புக்குள்ளேயே பொது மக்கள் சிக்குண்டிருக்கிறார்கள். இவர்களை மீட்பதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் முனைத்து வருகின்றது. இதேவேளை இராணுவ கட்டுப்பாடில்லாத பகுதிகளிலிருந்து தப்பிவந்த மக்கள் பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் அங்கிருக்கும் எமது அதிகாரிகளூடாக மேற்கொண்டு வருகின்றது. புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி கடல் மார்க்கம் மட்டுமே எனவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.
இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளும் பூரண திருப்தியுடனும் சந்தோஷத்துடனுமே இருக்கிறார்கள். அண்மையில் வவுனியா முகாம்களை நேரில் சென்று பார்வையிட்ட ஐ.நா. பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ்சும் தனது திருப்தியை வெளியிட்டிருந்தார். அகதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு முன்னெடுத்துள்ளது. பொதுமக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதனால் அகதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கியிருக்கின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி, சார்க் வெளிவிவகார அமைச்சர்களை நேற்று முன்தினம் சந்தித்தவேளை கூடிய விரைவில் வடக்கே பாரிய அளவிலான மீள்குடியேற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விருப்பதாக கூறியுள்ளார். அப் பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றிய பின்னர் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுத்ததும் மீள்குடியேற்றத் திட்டம் அமுல்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
வடக்கில் நீண்ட மற்றும் குறுகியகால அடிப்படையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல்கள் இடம்பெற்று வருவதனால் அரசியல் ரீதியான தீர்வு கைவிடப்பட்டு விட்டதாக கருதுவது தவறு. சர்வகட்சி குழு இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
Kusumbo
இதுகுமொரு பகிடிதான். ஆயுதத்தை வைத்தால் யுத்த நிறுத்தம் தானே. உங்கடை பிரசாரங்களில் இருந்து நாங்கள் அறிவது புலிகள் சும்மா எந்தவித எதிர்பும் இன்றி சாகிறார்கள் ஓடுகிறார்கள் என்று. இப்பிடிப்பாத்தால் புலிகள் ஆயுதத்தை வைத்திருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான் இல்லையா.