“விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்காவிட்டால் போர்நிறுத்தம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்கவே தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் வேகத்தை தணித்துள்ளோம்” என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
“தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் ஒரு சில கூற்றுக்களை வெளியிட நேர்கின்றது. ஆனால் இந்தியா எமக்குப் பாதகமாக செயற்படாது என்பது உள்ளார்ந்த ரீதியாக எமக்குத் தெரியும். வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தக் காலப் பகுதியில் மக்கள் பெருமளவில் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விடுதலை புலிகளின் போர் நிறுத்தக் கோரிக்கையை அரசாங்கம் பயன்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.