விடுதலைப் புலிகளுடன் யுத்தநிறுத்தம் மேற்கொள்ளுமாறு புதிதாக விடுக்கப்பட்ட அழைப்புகளை கொழும்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.
சரணடையுமாறு சர்வதேச ரீதியாக விடுக்கப்படும் கோரிக்கைகளை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டால் யுத்தநிறுத்தம் தேவைப்படாததாக அமையும் என்று வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கோஹண ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் சண்டை இராது. மோதல் தானாகவே நின்றுவிடும் என்று கலாநிதி கோஹண கூறியுள்ளார்.
மோதல்களை நிறுத்துமாறு இந்தியா நேற்றுமுன்தினம் சனிக்கிழமை விடுத்திருக்கும் அழைப்புத் தொடர்பாகவே பாலித கோஹண இதனை தெரிவித்திருக்கிறார். இலங்கையில் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக இந்தியா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது என்று தூத்துக்குடியில் வைத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்ததுடன் ஒவ்வொரு நாளும் நெருக்கடி தீவிரமடைந்து வருவதாகவும் கூறியிருந்தார்.