இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது – நீதி அமைச்சர் அலி சப்ரி

“இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது.”  என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமலாக்கப்பட்டோர் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் எமது நிகழ்வு நடக்கும் இடத்திற்கு முன்பும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நேற்றைய தினம் நான் முல்லைத்தீவில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போதும் நான் கலந்துகொண்ட நிகழ்வு முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அவர்களை நான் சந்திக்க அழைத்தேன் ஆனால் அவர்கள் சந்திக்க விரும்பவில்லை என்று கூறினார்கள்.

எனவே அதிலிருந்து ஒன்றை நான் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அவர்கள் போராட்டம் செய்யவே வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பிரச்சனைக்குரிய தீர்வு தேவையில்லை. அவர்களுக்கு போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்காது.

கடந்த 13 வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு அவர்களுக்கு என்ன தான் கிடைத்தது. போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் எதையும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது தானே? அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த காணாமலாக்கப்பட்டோருக்கான பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

ஆனால் நான் ஒன்றை கூறிவைக்க விரும்புகின்றேன் நீதி அமைச்சர் என்ற ரீதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமானால் அது அரசுடன் பேசித்தான் அதற்குரிய தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர போராட்டங்களை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாது

போராட்டங்களை மேற்கொள்வது அவர்களுடைய ஜனநாயக உரிமை அதனை மதிக்கின்றேன் அதனை தடுக்க மாட்டேன் ஆனால் போராட்டங்களை நடத்தி எதனையும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *