நாம் இனி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கதைகளை நம்ப போவதில்லை. முடிவு கிடைக்கும் வரை நாம் தொழிலுக்கு செல்ல மாட்டோம். உரியவர்கள் தீர்வோடு இங்கு வர வேண்டும். எழுத்து மூலமாக தீர்வு பெற்று தர வேண்டும் என யாழ். மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் பருத்தித்துறை சுப்பர் மேடம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடலில் இரண்டு உயிர்கள் பறிபோய்விட்டது.இனியும் நாம் பொறுத்திருக்க மாட்டோம். ஆகவே தான் பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில், மக்கள் போராட்டமாக இதை முன்னெடுத்துள்ளோம்.
தற்போது 13 மீனவ சங்கங்கள் இணைந்துள்ளன. தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பல வாக்குறுதிகளை எமக்கு தந்து ஏமாற்றியுள்ளனர். ஆகவே, நாம் இனி அவர்களின் கதைகளை நம்ப போவதில்லை. முதலில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். முடிவு கிடைக்கும் வரை நாம் தொழிலுக்கு செல்ல மாட்டோம். உரியவர்கள் தீர்வோடு இங்கு வர வேண்டும். எழுத்து மூலமாக தீர்வு பெற்று தர வேண்டும்.
நாம் இனியாரையும் சென்று சந்திக்க மாட்டோம். கடற்படை தளபதியோ அல்லது, அமைச்சரோ இங்கு வந்து எழுத்து மூலமாக எமக்கு வாக்குறுதி தர வேண்டும். இனிமேலும் இந்திய இழுவை படகால் எமக்கு அநீதி இழைக்க கூடாது. இந்திய தமிழ் சொந்தங்களுடன் எமக்கு கோபம் இல்லை. முரண்பாடு இல்லை. எமது எல்லைக்குள் வந்து மீன் பிடித்து, எங்கள் கடல் வளங்களையும், எமது உடமைகளையும் அழிக்க வேண்டாம் என்று தான் நாம் கூறுகின்றோம்.
ஆகவே இந்திய ஊடகங்கள் செய்திகளை தெளிவாக உண்மையாக வழங்க வேண்டும். மீனவ சமுதாயம் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும். ஆளுநர் கூட அதிகாரி ஒருவரை அனுப்பி வைத்திருந்தார். நாம் ஆளுநர் அலுவலகத்தில் சென்று அவரை சந்திக்க மாட்டோம். யார் என்றாலும் இங்கு வந்து தீர்வை எழுத்து மூலம் தரவேண்டும். – என்றனர்.