பிந்திய செய்தி – பாக்கிஸ்தானில் இலங்கை டெஸ்ட் கிரிக்கற் அணி மீது துப்பாக்கிச் சூடு. ஆறு வீரர்கள் காயம்! எட்டு பொலிஸார் பலி!

20090302.jpgஇலங்கை டெஸ்ட் கிரிக்கற் அணியின் மீது இன்றுகாலை துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பாக்கிஸ்தான் லாகூர் நகரில் கடாபி விளையாட்டரங்கில் இரண்டாவது டெஸ்ட் விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று விளையாட்டில் கலந்துகொள்வதற்கென மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியின் மீதும், பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை கிரிக்கற் அணியைச் சேர்ந்த ஆறு காயமடைந்துள்ளனர்.

இதில் கிரிக்கற் வீரர்களான திலான் சமரவீர,  மற்றும் உதவிப் பயிற்சியாளர் ஆகியோர் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நால்வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் வைத்திய சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளனர். கிரிக்கற் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு காலில் சிறிய காயமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனந்தெரியாத துப்பாக்கி நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச்சேவை அறிவித்துள்ளது.

அதேநேரம் இன்று நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.  

காயமடைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் இலங்கைக் கிரிக்கற் வீரர்கள் வருமாறு:-

திலான் சமரவீர,

தாரங்க பரணவித்தான,

அஜந்த மெண்டிஸ்,

சங்ககார ,

மகேல ஜெயவர்தன

சமிந்தவாஸ்

செய்திப் பின்னிணைப்பு

பாக்கிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக இலங்கைக் கிரிக்கற் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரியொருவருடன் ‘தேசம்நெற்’ தொடர்புகொண்டபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திலான் சமரவீரவினதும் உதவிப்பயிற்சியாளர் போல் சாபேர் ஆகியோரின் நிலைமை பாரதூரமானதல்ல எனத் தெரிவித்தார். ஏனைய கிரிக்கற் வீரர்கள் 5 வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் தொலைக்காட்சிச்சேவை இது குறித்து தகவல் தெரிவிக்கையில்,  வெள்ளை நிற வாகனமொன்றில் வந்த இனந்தெரியாதவர்களாலே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தது. இறுதியாகக் கிடைக்கும் தகவல்களின்படி இத்தாக்குதலில் எட்டு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதம்

பாகிஸ்தான் லாகூரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை வீரர்கள் காயமடைந்ததையடுத்து, வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவசர விமானம் மூலமாக இலங்கை அணி வீரர்களை வெகு விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கிரிக்கெட் சபை பிரதம நிறைவேற்று அதிகாரி துலிப் மெண்டிஸ் தெரிவித்தார்.

அத்துடன் தோற்பட்டையில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து காயமடைந்த பரணவித்தான, திலான்,துணைப் பயிற்றுவிப்பாளர் போல் ஆகியோர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும், இன்று இரவுக்குள் நாடு திரும்புவர் எனவும் துலிப் மெண்டிஸ் கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து லாகூர் கடாபி மைதானத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தமையை இட்டு தாம் அதிர்ச்சி அடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இலங்கை வீரர்களுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்த பின்னரே அவர்கள் பாகிஸ்தான் சென்றதாகவும் அர்ச்சுன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது முதல் தீவிரவாத தாக்குதல் 

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவர் காயம்:

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அம்பயர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாரும் அபாய கட்டத்தில் இல்லை-ஜெயசூர்யா:

இதற்கிடையே தாக்குதலில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா அளித்துள்ள பேட்டியில், எந்த வீரரும் அபாய கட்டத்தில் இல்லை. கவலைப்படும்படியான நிலையில் எந்த வீரரும் இல்லை. இதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறோம். இந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் நாங்கள் இருந்த வேன் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஜெயசூர்யா கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சதிதான் இது

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில ஆளுநர், இது தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி.  மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சதிதான் இது என்று தெரிவித்துள்ளார்.

cricket_pakisthan.jpg

pak-2nd-test.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

8 Comments

 • தனித்தமிழ் தனிகாசலம்
  தனித்தமிழ் தனிகாசலம்

  “தமிழ்”, “தமிழினம்”, என்ற வட்டத்திற்கு வெளியே, மிகவும் ஆழமாக இந்த விஷயம் சென்று விட்டது. தவளை கத்தியது போல, தேவையில்லாத,”வீர” விளம்பரம் பல “பாம்புகளை” வரவழைத்துவிட்டது. இனி, “தமிழ்!!”, என்று அடித்தொண்டையில் கத்தும் அரசியல்வா(ந்தி)திகளைக் கண்டால் காதை மூடிக்கொண்டு விலகிவிட வேண்டும்.

  Reply
 • Mr. Cool
  Mr. Cool

  President Mahinda Rajapaksa unequivocally condemned the cowardly terrorist attack targeting the Sri Lankan Cricket Team in Lahore , Pakistan , today emphasizing that the Sri Lankan team had gone to Pakistan as ambassadors of goodwill.

  The President, who is at present in Nepal , has instructed that immediately action be taken to bring back to Sri Lanka all members of the team, ensuring their safety and security.

  The Minister of Foreign Affairs who is now in Nepal has been instructed to leave for Pakistan immediately in this regard. Instructions also have been given to the Sri Lankan High Commissioner in Islamabad to facilitate the arrangements with Pakistani authorities on medical attention for the players in hospital, and their safe return of the team to Sri Lanka .

  The President expressed his sincere good wishes for the speedy recovery for all injured players and officials and their well being.

  Reply
 • மொகமட் அமீன்
  மொகமட் அமீன்

  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாளத்துக்கான தனது மூன்று நாள் விஜயத்தை இரண்டடு நாட்களாகக் குறைத்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இன்று லாகூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாகவே ஜனாதிபதி தமது நிகழ்ச்சிகளை குறைத்துக்கொண்டு நாடு திரும்புகிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இன்று லாகூரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஷிப் சர்தாரியும் பிரதமர் செய்யத் யூசுப் ரஸா கிலானியும் நேபாளம் காத்மண்டுவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளனர். அத்துடன் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியினரை இலங்கைக்கு அழைத்துவர இன்று விசேட விமானம் ஒன்று பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

  Reply
 • மொகமட் அமீன்
  மொகமட் அமீன்

  இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் இன்று நடத்திய கொலை வெறித் தாக்குதல் கிட்டத்தட்ட மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே இருந்தது.

  மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் போலவே லாகூர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் டிரஸ் அணிந்திருந்தனர். முதுகில் பைகளைத் தொங்க விட்டபடி கையில் துப்பாக்கிகளுடன் சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.

  மேலும், வேறு பகுதியிலிருந்து வந்து உடனடியாக தாக்குதலில் இறங்கியது போலவும் தோன்றுகிறது. மேலும் மும்பையில் தாக்குதல் நடத்திய அதே கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

  தீவிரவாதிகள் வந்த விதமும், அவர்கள் தாக்குதல் நடத்திய விதமும், போலீஸாரை செயலிழக்க வைத்த விதமும் இதை நிரூபிப்பதாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  ……….
  இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற தீவிரவாதிகள் கடாப் ஸ்டேடியத்தில் விட்டுச் சென்ற 4 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  மேலும் தீவிரவாதிகள் விட்டுச் சென்ற ஏ.கே.47 துப்பாக்கிகள் நிரம்பிய பையையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

  2 வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. இவை தவிர மேலும் 2 குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை நிபுணர்கள் செயலிழக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

  தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து லாகூர் முழுவதும் பீதி நிலவுகிறது. பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  Reply
 • மொகமட் அமீன்
  மொகமட் அமீன்

  பாகிஸ்தானுக்கு விளையாடச் செல்ல இந்தியா மறுத்த நிலையில் இந்தியாவுக்குப் பதிலாக விளையாடச் சென்றது இலங்கை அணி. இந் நிலையில் தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

  பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலையைக் கருத்தில் கொணடு கடந்த சில வருடங்களாகவே கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய அணி மறுத்து வந்தது. இந்திய அணியும், மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது.

  இதையடுத்து இந்தியாவுக்குப் பதில் விளையாட வருமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

  இதைப் பரிசீலனை செய்த இலங்கை கிரிக்கெட் வாரியம், டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்தது.

  முதலில் ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றன. இந்த நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடந்து வந்தன.

  முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் இரு அணிகளும் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தன. இந்த நிலையில்தான் இப்படி ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது.

  கடைசியாக பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலிய ஏ அணி தான் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்தது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி கடந்த 2005ல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன் பின்னர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய அணிகள் எதுவும் பாகிஸ்தானுக்கு வரவில்லை.

  Reply
 • அருட்சல்வன் வி
  அருட்சல்வன் வி

  பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், அங்கு 2011ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) மறுபரிசீலனை செய்கிறது.

  இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஹரூண் லோர்கட் கூறுகையில்,

  2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இடங்கள் குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்யவுள்ளோம். இது தொடர்பான முடிவு இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும். ஐசிசி நிர்வாகக்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

  2011 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் இன்று இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதால் அங்கு போட்டிகளை நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படுகிறது.

  Reply
 • மொகமட் அமீன்
  மொகமட் அமீன்

  பாகிஸ்தான் அணியுடன் இரண்டாவது இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க சென்று கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பஸ் மீது கையெறி குண்டுகள் வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

  இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியாவில் கிரிக்கெட் நிலை பாதுகாப்பாக உள்ளது. எனினும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்துவிட்டதால், தேர்தல் பணிகள் கவனிக்க வேண்டியது இருக்கும். எனவே வரும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தள்ளி வைத்தால் நல்லதாக இருக்கும் என்றார்.

  இதையடுத்து பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.பி.எல். அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளை தக்க வைக்க வாய்ப்பில்லை என்றும், தற்போது தள்ளிவைத்தால் இந்த ஆண்டு போட்டிகளை நடத்த முடியாது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

  Reply
 • மொகமட் அமீன்
  மொகமட் அமீன்

  லாகூரில் இன்று இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அந்த அணியினர் அவசரஅவசரமாக அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  தாலிபான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் எனக்கருதப்படுகிற நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே, உடனடியாக பாகிஸ்தான் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தங்கள் நாட்டு வீரர்களை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

  இதனையடுத்து கடாஃபி ஸ்டேடியத்திலிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக லாகூர் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்கள் அபுதாபியிலிருந்து நாளை கொழும்புக்கு திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதனிடையே பாகிஸ்தான் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான அத்வானியுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  Reply