மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக்குழுவில், நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்த கருத்துக்களுக்கு வெளிவிவகார அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில், இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது, அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல தவறான அறிக்கைகள் குறித்து, வெளிவிவகார அமைச்சு கவலையுடன் குறிப்பிட விரும்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், பல முனைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை, அம்பிகா சற்குணநாதனின் சாட்சியம், முற்றாகப் புறக்கணிக்கிறது.
மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் தமது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என அவர் வழங்கிய பரிந்துரைகளில், அமைச்சு ஏமாற்றம் அடைந்துள்ளது.
இலங்கை போன்ற பல்லின மற்றும் பல மதங்கள் கொண்ட மக்கள் வாழும் நாட்டில், சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு, சர்வதேச சமூகத்தில் இலங்கை குறித்த ஆபத்தான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்படல் வேண்டும்.
‘சிங்கள பௌத்த தேசியவாதம்’ மற்றும் ‘இராணுவமயமாக்கல்’ போன்றவற்றை, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உந்துதலாக அம்பிகா சற்குணநாதன் குறிப்பிடுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்த உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், இனம் குறித்த தெளிவற்ற கூற்றுக்களை அவர் முன்வைத்துள்ளார்.
இலங்கையில் ‘மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் கோரும் அரசுகளின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக’ சீனாவுடனான தனது நட்பை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாக அம்பிகா சற்குணநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்து – பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் மூலோபாயப் போட்டியைக் கவனத்தில் கொண்டு, சுதந்திரத்திற்குப் பின்னர் நாங்கள் ஏற்றுக்கொண்ட அணிசேரா வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப, நடுநிலைமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எமது முக்கிய வெளியுறவுக் கொள்கை சார்ந்த நோக்காகும்.
தேசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக, சீனாவைத் தவிர, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற பல நாடுகளுடன், இலங்கை கூட்டுறவை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பில், இத்தகைய கூட்டாண்மைகள், எந்தவித தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும், வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன ரீதியாக சமூகங்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு காலத்தில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தை நினைவூட்டுவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
அத்தோடு சிங்கள பௌத்த தேசியவாதம் மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சு, நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.