இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்கமறுத்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர்.
இதற்கிடையே, உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனையடுத்து, பர்தா அணிந்து வந்த மாணவிகள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவிகளும் காவி ஷால் அணிந்து ஊர்வலம் சென்றனர்.
ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகளைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால் நாங்கள் காவி ஷால் அணிந்து தான் கல்லூரிக்கு வருவோம் என்று அவர்கள் கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் தாவண்கரே மாவட்டத்தில் ஹிஜாப் தொடர்பான போராட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஹிஜாப் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மாநில அரசின் கூற்றுப்படி, ஹிஜாப் அணிந்து வகுப்பறைகளில் நுழைவதைத் தடை செய்வது, அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள மதச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக இல்லை என தெரிவித்துள்ளது.
கர்நாடகா கல்விச் சட்டம்-1983 இன் 133 (2)படி, கல்லூரி மேம்பாட்டுக் குழு அல்லது நிர்வாகத்தின் மேல்முறையீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட உடையை மாணவர்கள் அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ” மாணவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை கட்டாயமாக அணிய வேண்டும். அதே சமயம், தனியார் பள்ளி நிர்வாகம் தங்களுக்கு விருப்பமான சீருடையை தேர்வு செய்து கொள்ளலாம். நிர்வாகக் குழு சீருடையைத் தேர்வு செய்யாத பட்சத்தில், சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் ஆடைகளை அணியக் கூடாது” குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலில் உடுப்பி, சிக்மகளூருவில் மட்டும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.