இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம் 6 இஸ்லாமிய மாணவிகள் புர்ஹா (ஹிஜாப்) அணிந்து வந்ததால் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. சமத்துவத்தை நிலைநாட்ட மாணவ மாணவிகள் சீருடை அணிய வேண்டும் என்ற அரசு உத்தரவை மீறி அம்மாணவிகள் புர்கா அணிந்து வந்ததாக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், புர்கா அணிவது எமது உரிமை என்று கூறி பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரிக்கு வெளியே தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனிடையே, இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராகவும் இந்து மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாகவும் கல்லூரி மாணவர்கள் பலர் காவி துண்டை அணிந்துகொண்டு எதிர்வினையாற்றி வருவது மாநிலத்தை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
Full video. pic.twitter.com/rUvjJZuThe
— Mohammed Zubair (@zoo_bear) February 8, 2022
குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சக மாணவிகள் தங்களது உரிமைக்காக போராடி வரும் சூழலில், மத வன்முறையை தூண்டும் நோக்கில் மாணவர்கள் பலர் காவி சால்வை அணிந்துகொண்டு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கத்திக்கொண்டு இஸ்லாமிய மாணவியை அச்சுறுத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் ஆசிரியர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும், ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றிய மாணவர்கள் காவிக் கொடியேற்றும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பல வீடியோக்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் கல்லூரி ஒன்றில் பேராசிரியை பாடம் எடுத்துக்கொண்டிருக்க, காவி சால்வை அணிந்து அட்டகாசம் செய்யும் மாணவர்களின் வீடியோவும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அம்மாநில முதல்வர் 3 நாட்கள் விடுமுறை அளித்துள்ளார். மேலும், மாணவர்களும், பெற்றோர்களும் அமைதி காக்க வேண்டி கோரிக்கையும் வைத்துள்ளார்.