ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த, சவுதி அரேபியா மற்ற மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து ஏமனுக்கு இராணுவ ரீதியான உதவிகளை வழங்கி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவின் எல்லை மாகாணங்கள் மீது அடிக்கடி ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி 17ந் தேதி அன்று அபுதாபியில் கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று சவுதி எல்லைக்கு அருகில் உள்ள அபா சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். சவுதிஅரேபிய படையினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை வானிலேயே வெடிக்கவைத்தனர் அதன்சிதறல்கள் காரணமாக இலங்கையர்கள் உட்பட 12 பேர்காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பங்களாதேஸ் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் காயமடைந்;துள்ளனர்.
இதற்கு பொறுப்பேற்பதாக கூறியுள்ள ஏமன் கிளர்ச்சியாளர்கள், சவுதி இராணுவ நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட விமான நிலையத்தை குறி வைத்ததாகவும், பொதுமக்கள் அத்தகைய தளங்களில் இருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்துள்ளனர்.