கனடாவில் லொரி ஓட்டுனர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிடவில்லை என்றால் உரிமம் பறிக்கப்படுவதுடன் கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரம் அதிகரித்துள்ளதை அடுத்து அண்டை நாடான கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான லொரிகளை இயக்கும் ஓட்டுனர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா எல்லையில் லொரிகளை நிறுத்தியும் முக்கிய பாலங்களில் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியும் டிரக் ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2 வாரங்களை கடந்து தொடரும் போராட்டத்தில் கனடாவில் வர்த்தகம் பெரிதளவில் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கனடா பிரதமர், ஓட்டுநர் உரிமம் பறித்து குற்ற நடவடிக்கை ஆகியவற்றை தவிர்க்க டிரக் ஓட்டுனர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது,
‘கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் நடத்துவோர் சட்டங்களை மீறுகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அரசினைத் தள்ள வேண்டாம். அரசின் கடும் நடவடிக்கைகள் உங்கள் வேலையை வாழ்க்கை சூழலை, சர்வதேச பயண அனுமதியை பாதிக்கும் என எச்சரிக்கிறேன். கொரோனா கட்டுப்பாடு குறித்த உங்கள் அதிருப்தியை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் போராட்டத்தால் மக்கள் பாதிக்கக் கூடாது. போராட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டும்,’ என்றார்.