மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின்போது மாணவனொருவன் தொலைபேசியை கொண்டுசென்று பிரிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபரின் மகன் குறித்த பாடசாலையிலேயே உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றார்.
இந்த நிலையில் கணித பாட பரீட்சையின்போது அதிபரின் மகன் பரீட்சை மண்டபத்திற்குள் மறைமுகமாக கையடக்கத் தொலைபேசியொன்றை கொண்டுசென்றுள்ளார்.
மேலும் கையடக்கத் தொலைபேசியின் வட்ஸ்அப் மூலம் வந்ததாக கூறப்படும் வினாக்களுக்கான விடையை தொலைபேசியை பார்த்து எழுதியுள்ளார். இதன்போது பரீட்சை மண்டபத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் இதனை அவதானித்து, விடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அடம்பன் பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, பரீட்சை மண்டபத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அத்தோடு, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகின்ற ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்கள் கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலதிக விசாரணைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.