உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளது. உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற செய்தி பரவி வருவதால், போர் பதற்றம் நீடிக்கிறது.
உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷ்யா, படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. இந்த நெருக்கடி குறித்தும், எல்லையில் படைகள் குவிப்பு குறித்தும் விவாதிப்பதற்கு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ரஷியாவுக்கு உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ஏவுகணைகளை நிறுத்துவதற்கான வரம்புகள் மற்றும் இராணுவ வெளிப்படைத்தன்மை குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் சான்சலருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு புதின் கூறியதாவது:-
உக்ரைன் மற்றும் பிற முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும், ரஷ்ய எல்லைகளுக்கு அருகே ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கூட்டு படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் நிராகரித்தன. அதேசமயம், ரஷ்யா முன்பு முன்மொழிந்த பல பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, ஐரோப்பாவில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான வரம்புகள், பயிற்சிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பிற நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் ரஷ்யாவின் முக்கிய கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.
இவ்வாறு புடினின் கூறினார்.
உக்ரைன் எல்லையை ஒட்டி ராணுவ பயிற்சிக்கு பிறகு படைகளின் ஒரு பகுதியினர் திரும்ப பெறப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்த நிலையில் புடினின் இந்த பேட்டி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.