வவுனியா வைத்தியசாலையில் நடப்பது என்ன..? – 12 மாதங்களில் 73 குழந்தைகள் மரணம் – தரமிழந்து போகிறதா இலவச வைத்தியம் ?

வவுனியா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 46 குழந்தைகள் உட்பட 73 குழந்தைகள் மரணமடைந்துள்ளதுடன், 6 வருடங்களில் வைத்தியசாலையில் மோசமான நிலையை இது வெளிப்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட வினாவிற்கு தற்போது மேற்படிப்புக்காக செல்லும் வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கே.ராகுலனின் பதவி முத்திரையுடன் பெறப்பட்ட தகவலிலேயே இவ் அதிர்ச்சி விபரம் வெளியாகியுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான விபரம் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால் கோரப்பட்டிருந்தது.

அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு 45 குழந்தைகளும், 2016 ஆம் ஆண்டு 47 குழந்தைகளும், 2017 ஆம் ஆண்டு 45 குழந்தைகளும், 2018 ஆம் ஆண்டு 58 குழந்தைகளும், 2019 ஆம் ஆண்டு 52 குழந்தைகளும், 2020 ஆம் ஆண்டு 48 குழந்தைகளும், 2021 ஆம் ஆண்டு 73 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு குழந்தை பிறக்கும் முன் அல்லது பிறக்கும் போது விடுதி 5 இல் 8 குழந்தைகளும், விடுதி 7 இல் 16 குழந்தைகளும், குழந்தை பிறந்த பின் விடுதி 7 இல் 3 குழந்தைகளும், குழந்தைகளுக்கான விசேட அவசர சிகிச்சைப் பிரிவில் 46 குழந்தைகளுமாக 73 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 6 வருடங்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் அதிகரித்த சிசு மரணமாக இது பதிவாகியுள்ளதுடன், மொத்த சிசு மரணங்களிலும் 2021 ஆம் ஆண்டே அதிக இறப்புக்கள் நிகழ்ந்துள்ளது.

சுகாதார, மருத்துவ துறையானது வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையிலும், வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் 73 குழந்தைகள் 12 மாதங்களில் இறந்துள்ளமையானது இலகுவாக கடந்து போக முடியாத ஒரு விடயமாகும்.

அத்துடன் குழந்தை மரணமடைந்தமை தொடர்பில் சிலர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இன்னமும்  சில விடயங்களுள் மக்கள் நம்பிக்கையுடன் பெறுகின்ற ஒரு சேவையாக மருத்துவ சேவை உள்ள நிலையில் இலங்கை சுகாதார அமைச்சு விரைந்து இந்த வைத்தியசாலை தொடர்பிலான விடயங்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. அண்மைக்காலங்களில் வைத்திய மாபியாக்கள் இலங்கையிலும் பெருக்கமடைய ஆரம்பித்திருப்பதை பல இடங்களில் காண முடிகின்றது. இவ்வாறான காலங்களில் இலவச வைத்தியம் தரமிழந்து போவது ஆரோக்கியமானது அல்ல என்பதை வவுனியா வைத்திய சமூகம் கவனத்தில் கொண்டு குறித்த பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் தீர்வை எட்டுவதுடன் இதற்கான காரணம் தொடர்பிலும் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *