கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்களே மேற்படி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இரண்டு சின்னங்களும் அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படவில்லை என்ற அடிப்படையின் கீழ் பட்டியலில் சேர்க்கப்பட்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் சேர்க்கப்பட்டிருந்தன.
இந்த வருடம் ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில், பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் நோக்கங்களுக்காக அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.
இரண்டு சின்னங்களும் தேசிய சின்னங்களுக்கு ஒத்ததாக இருப்பதால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதன்காரணமாக, ஓர் அரசியல் கட்சிக்கு அவை சின்னமாக ஒதுக்கப்படக் கூடாது என்றும், எதிர்காலத்தில் நாட்டின் எந்த அரசியல் கட்சியும் அதை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு கருதுவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.