குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை கைவிடுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாரிடம் கூறியதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற உள்ளூர் சிவில் சமூகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் (NGO) பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பீரிஸ் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக பொறுப்பற்ற பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அது நடக்கிறதா இல்லையா என்று ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
இதன்போது, சிவில் சமூகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் பொலிஸார் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து வலுவான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
அத்தோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை வெளிவிவகார அமைச்சர் வலுவாக ஆதரித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்கள் ஒன்றும் புதிதல்ல என்று சிலர் எடுத்துள்ள நிலைப்பாட்டை அவர் நிராகரித்தார்.
சட்டமா அதிபர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத போதிலும், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை பயங்கரவாதத் தடைச் சட்டம் தடுத்ததாக ஜி.எல்.பீரிஸ் கூறினார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்குவதற்கு சட்டத்தரணிகள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.