“எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன்.வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் என்னிடம் இல்லை. அனைவரையும் இந்த நாட்டு மக்கள் என்று தான் பார்கின்றேன்.” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“வன்னி மாவட்டத்துடன் நான் சம்பந்தமுள்ளவனாக இருக்கின்றேன். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நான் ஜனாதிபதியாக முன் பல அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தேன். சுகாதாரம், நீர்பாசனம், விவசாயம் என பல பொறுப்புக்களில் இருந்தேன். அதன் போது வன்னி பிரதேசத்திற்கு வந்து பல சேவைகளை செய்துள்ளேன்.
2015ஆம் ஆண்டு என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்ய அதிக வாக்குகளை நீங்கள் வழங்கினீர்கள். நான் ஜனாதிபதியாக இருந்த போதும் பல சந்தர்ப்பங்களில் வன்னிக்கு வந்தேன். ஜனாதிபதியாக இருந்த போது இந்த மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை செய்துள்ளேன். வடக்கு, கிழக்குக்கு என ஒரு அமைப்பினை நான் நிறுவினேன். யுத்தம் நடந்த பகுதிகளில் அபிவிருத்திகளை துரிதப்படுத்துவதற்கு அந்த அமைப்பை நிறுவினேன். என்னால் பல அபிவிருத்திகளை செய்ய முடிந்தது. சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை
வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இல்லை. அனைவரையும் இந்த நாட்டு மக்கள் என்று தான் பார்கின்றேன். எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன். நிரந்தர சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறேன். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் மூலம் நிதி வழங்கினேன். சீனாவில் இருந்து அதற்கு உதவிகளை பெற்று பொலன்னறுவையில் சிறுநீரக வைத்தியசாலையை நிறுவினேன்.
எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை.விவசாயத்திற்கு தேவையான பெருட்களுக்கு தட்டுபாடு இருக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.